"தாய்ப்பால் கொடுப்பது அழகிய விஷயம், அதில் தவறு இல்லை”: விவாதத்தைக் கிளப்பும் அட்டைப்படம்

பொது இடங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை பலரும் அருவருப்பாக கடந்துபோகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

பொது இடங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை பலரும் அருவருப்பாக கடந்துபோகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஆனால், தாய்ப்பால் புகட்டுதல் இயற்கையான ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், க்ரிஹலஷ்மி (Grihalakshmi) எனும் மலையாள இருவார இதழில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம் அட்டைப்படமாக வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. க்ரிஹலஷ்மி இதழ் பெண்களுக்காக மாத்ரூபூமி வெளியீடாக வரும் இதழாகும்.

அந்த அட்டைப்படத்தில், “தாய்மார்கள் கேரளாவிடம் கூறுகின்றனர்: “தயவுசெய்து எங்களை உற்றுப்பார்க்காதீர்கள்; நாங்கள் பால் கொடுக்க வேண்டும்”, என எழுதப்பட்டிருந்தது.

இந்த அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மாடல் கிலு ஜோசஃப், கவிஞர், எழுத்தாளர், விமான பணிப்பெண் என பன்முகத் தன்மை கொண்டவர். இதுகுறித்து, கிலு ஜோசஃப் தெரிவிக்கையில், “தாய்ப்பால் புகட்டுவதை பாலியல் ரீதியாக தொடர்புப்படுத்தி பார்ப்பதுதான் தவறி. அது ஒரு அழகான விஷயம். இதை ஏன் தவறாக நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு பால் புகட்டினால், எந்த கடவுள் கோபமடையும்”, என கூறினார்.

”நான் என் உடல் குறித்து மிகவும் பெருமையடைகிறேன். எனக்கு எது சரியோ அதைத்தான் நான் செய்கிறேன். அதனால், இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு முன் நான் சற்றும் யோசிக்கவில்லை”, எனவும் அவர் தெரிவித்தார்.

இவர் திரிசிவப்பேரூர் கிளிப்பதம் (Thrissivaperoor Kliptham ), ஜகோபிண்டே ஸ்வர்கராஜ்யம் (Jacobinte Swargarajyam) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சி/ஓ சாயிரா பானு உள்ளிட்ட சில படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை.

இவர் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள குமிளியில் வசித்துவருகிறார்.இவரது மூத்த சகோதரி கன்னியாஸ்திரியாக உள்ளார். இவ்வாறு அட்டைப்படத்திற்கு போஸ் கொடுக்கக்கூடாது என அவர் உறுதியாக மறுத்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் யாரும் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்ருபூமியின் இணை நிர்வாக இயக்குநர் ஸ்ரேயம்ஸ் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், “பொது இடங்களில் பலரும் தங்களை உற்றுநோக்குவதால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை என பல பெண்கள் என்னிடம் கூறியிருக்கின்றனர். தன் குழந்தையுடன் ஒரு தாய் செய்யும் அழகான விஷயம் தாய்ப்பால் கொடுப்பது. இதை தவறு என யார் நினைக்கிறார்களோ,, அவர்களிடம் தான் தவறு உள்ளது”, என கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close