நிரவ் மோடியின் உறவினர்தான் முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளா?

ஆகாஷ், ஷாலோகா திருமணம், இரு வீட்டாராலும் பேசி ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்தான் என்றாலும், இருதரப்பிலும் தற்போது இதை உறுதி செய்ய மறுக்கிறார்கள்

ஆர்.சந்திரன்

இந்தியாவின் முதல் நிலைப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளாக வரப்போவது, அண்மையில் வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண் என செய்திகள் உலா வருகிறது. இதை, எந்த தரப்பும் மறுக்கவில்லை. ஆனால், உறுதிப்படுத்தவும் இல்லை.

முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி, தனது கல்லூரிக் கல்வி முடித்து இப்போது ரிலையனஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். அதனால், அவரது திருமணம் குறித்து பேச்சு எழுந்துள்ளது. ஆகாஷ் அம்பானியுடன் பள்ளி நாட்களில் ஒன்றாகப் படித்த ஷாலோகா மேத்தா என்ற பெண்ணை அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என தற்போது சொல்லப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய வைர வியாபாரிகளில் ஒருவரான ரஸ்ஸல் மேத்தா என்பவரின் இளைய மகள்தான் ஷாலோகா மேத்தா. ரஸ்ஸல் மேத்தா, ரோஸ் ப்ளு டைமண்ட்ஸ் என்ற மிகப் பிரபலமான வைர நகைக்கடையின் உரிமையாளர்.

இது ஒருபுறமிருக்க, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷாலோகா மேத்தா இருவருமே திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். 2009ம் ஆண்டு பள்ளிப்படிப்பு முடித்தபின், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பற்றிய பட்டப்படிப்புக்காக சென்ற ஷாலோகா, பின்னர் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் சட்டப்படிப்பின் முதுகலைப்பட்டத்தையும் பெற்றவர். 2014ம் ஆண்டுமுதல் ரோஸ் ப்ளு பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் இயக்குனராக, ஷாலோகா பணியாற்றி வருகிறார். ஷாலோகாவின் தாய் மேனா மேத்தா, நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர் என்கின்றன தகவல்கள்.

ஆகாஷ் மற்றும் ஷாலோகா ஆகியோரது திருமணம், இரு வீட்டாராலும் பரஸ்பரம் பேசி ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்தான் என்றாலும், இருதரப்பிலும் தற்போது இதை உறுதி செய்ய மறுக்கிறார்கள். இதற்கு, அண்மையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடி சிக்கியதுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த ஊழல் வெளியாகாமல்… நிரவ் மோடியின் பெயர் இந்த அளவு கலங்கப்படாமல் இருந்திருந்தால், மார்ச் 24 அன்று நிச்சயதார்த்தம் என சொல்லப்படுவது குறித்த கேள்வியை இரு தரப்பிலும் தவிர்க்க மாட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது.

×Close
×Close