சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது அடுத்த முறையும் பிரதமராக நரேந்திர மோடி தான் வர வேண்டும் என கூறியுள்ளார்.
நடப்பு பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்றுடன் முடிய உள்ளது. பாஜக அரசின் கடைசி மக்களவை கூட்டத்தொடர் இதுவாகும்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், தற்போது அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மீண்டும் வெற்றி பெற்று அவைக்கு வர வேண்டும் என்று பேசினார்.
மேலும், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று பேசினார். அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.
மேலும் பேசிய அவர், 'பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். மோடியே மீண்டும் பிரதமராக வருவார். அவர் தான் எங்களது விருப்பத்திற்குரிய பிரதமர். மோடியின் ஆட்சியில் அனைத்து கோப்புகளும் வேகமாக நகருகின்றன. அடுத்த முறையும் அவரே பிரதமராக வந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என கூறினார்.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், தங்களது நீண்ட கால எதிரியான மாயாவதியுடன் (பகுஜன் சமாஜ் கட்சி) தற்போது அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்திருக்கிறார். சமாஜ்வாதிகட்சி உடைய முக்கிய காரணமாக இருந்த முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர் ஷிவ்பால் சிங் தனியாக கட்சித் தொடங்கினார். இம்முறை சில மக்களவை தொகுதிகளில் அவர் போட்டியிடவிருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவ், 'மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்' என்று கூறியிருப்பது உ.பி., அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
