மும்பையில் தொடர்ந்து 12 மணிநேரம் ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் 50 மணிநேரம் கழித்து உயிரிழந்தார்.
ஷ்ரவன் குமார் செளத்ரி எனும் தொழிலதிபர், மத்திய மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் செய்திருக்கிறார்.
சகினகா பகுதியில் வசிக்கும் செளத்ரி, தனது தலையில் ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் செய்யப்பட்ட பிறகு உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை சந்தித்திருக்கிறார்.
மூச்சு எடுக்க முடியாமல், முகம் வீங்கிப் போன செளத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
டிரான்ஸ்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவர் அனாபைலாக்ஸிஸ் எனும் உயிர் கொல்லி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இது குறித்த மேற்படி விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
செளத்ரி, மருத்துவ விதிகளுக்கு எதிராக ஒரு நாளில் 9000 முடிகளை டிரான்ஸ்பிளாண்ட் செய்ய சொன்னதாக மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சிட்டிங்கில் 3000 முடிகளுக்கும் மேல் டிரான்ஸ்பிளாண்ட் செய்வதே மருத்துவ விதிகளுக்கு எதிரானது. ஆனால் செளத்ரி தொடர்ந்து 12 மணிநேரம் சிகிச்சை எடுத்திருக்கிறார்.
அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கிறார்கள் மும்பை காவல்துறையினர்.