மும்பை பிஜே வாடியா மருத்துவமனை மருத்துவர்கள், ஒரு வயதிற்கும் குறைவான குஷி என்ற குழந்தையின் தொண்டைக்குழியில் இருந்து இரண்டு இன்ச் கம்மலை சிகிச்சை மூலம் நீக்கியிருக்கின்றார்கள்.
மும்பை குர்லா பகுதியை சேர்ந்த சந்தீப் சோனி மற்றும் சாந்தினி சோனி அவர்களுக்கு குஷி சோனி ஒரு வயது முடிவடையாத பெண் குழந்தை இருக்கிறது. கடந்த வாரம் வீட்டில் குஷி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, தெரியாமல் மெட்டல் கம்மல் ஒன்றை விழுங்கிவிட்டாள். அது அவளுடைய மூச்சுக் குழலிலேயே தங்கிவிட்டது. அதன் காரணமாக, அவள் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அதனை தொடர்ந்து அவளுக்கு தொடர் இருமலும், காய்ச்சலும் வந்துவிட்டது. பயந்து போன அவளின் பெற்றோர்கள், குஷியை அருகில் இருக்கும் லோக்மன்யா திலக் முனிசிபல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் அவளுடைய மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவளுடைய முதல் பிறந்த நாளை கொண்டாட அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இந்நிகழ்வு அவர்களுக்கு அதிக பயத்தினை ஏற்படுத்தியது.
மூன்று நாள் அந்த மருத்துவமனையில் வைத்திருந்தும், எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படாத நிலையில், குஷியினை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள். மூச்சு விடுவதற்கான குழாய் அவள் உடலில் செருகப்பட்டிருந்தது. அது மேலும் நோய்த் தொற்றினை உருவாக்கி குஷியினை மேலும் நோயாளியாக்கியுள்ளது.
குஷியை பரிசோதனை செய்த காது-மூக்கு-தொண்டை மருத்துவர் திவ்யா பிரபாத், கம்மல் இருக்கும் இடத்தினை சரியாக கண்டறிந்து பிரான்ச்சோஸ்கோப்பி முறை மூலம், குஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 நிமிடங்களில் அந்த கம்மலை வெளியில் எடுத்துள்ளனர். தற்போது குஷி முழுமையாக குணமடைந்துவிட்டாள்.
வடியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மின்னி போதன்வாலா இது குறித்து குறிப்பிடுகையில், ”அவளுடைய நிலையைப் புரிந்து கொண்டு அதன்படி மிக விரைவாக செயல்பட்டிருந்தாள் இவ்வளவு தூரம் குஷி சிரமப்பட்டிருக்கமாட்டாள். சனிக்கிழமையன்று (இன்று) குஷி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில், அவளுடைய முதல் பிறந்த நாளை எங்கள் மருத்துவமனையில் கொண்டாடியதை நினைத்து சந்தோசப்படுகின்றோம்” என்று கூறியுள்ளார்.