பாலிவுட் நடிகர் ராகுல் போஸ், சண்டிகர் நட்சத்திர ஹோட்டலில் 2 வாழைப்பழத்திற்கு ரூ.442 பில் வழங்கப்பட்டதாக கூறியதன் பரபரப்பு அடங்குவதற்குள், எழுத்தாளர் கார்த்திக் தார், மும்பை ஹோட்டலில் 2 அவித்த முட்டைகளுக்கு ரூ.1,700 வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
எழுத்தாளரும், புகைப்பட கலைஞருமான கார்த்திக் தார், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் சமீபத்தில், சென்ட்ரல் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார். சாப்பிட்ட பிறகு வந்த பில்லை பார்த்து அதிர்ந்தததோடு மட்டுமல்லாது, அந்த பில்லை போட்டோ எடுத்து டுவிட்டரிலும் பகிர்ந்துள்ளார்.
பில்லை பார்த்து அவர் அதிர்ந்ததன் காரணம் இதுதான்... இரண்டு அவித்த முட்டைகளின் விலை ரூ.1,700 ( வரி இல்லாமல்), டயட் கோக்கின் விலை ரூ.260 என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது தான்....
இந்த பில், சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளதோடு மட்டுமல்லாது, ஹோட்டல்களின் இந்த அநியாய விலைக்கொள்ளைகள் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் தாரின் இந்த டுவிட்டை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். வருங்காலத்தில் நமது உணவை தீர்மானித்திருப்பது சுவையின் அடிப்படையில் அல்லாமல், அதன் விலைப்பட்டியலில் தான் இருக்கும் என்பதுபோல பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க சம்பந்தபட்ட ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ராகுல் போஸின் வாழைப்பழ விலை, தற்போது அவித்த முட்டை விலை விவகாரம், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
என்ன தப்பு இருக்கு : சாலையோர கடையில் ஒரு கப் காபி ரூ. 10 என்ற அளவில் உள்ளது. அதே காபி, லக்சுரி ஹோட்டலில் ரூ.250 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நட்சத்திர மற்றும் உயர்தர ஹோட்டல்களில், உணவுப்பொருட்களுக்கு மட்டும் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. ஹோட்டல் அளிக்கும் சேவை, தரம், பயன்படுத்தப்படும் பொருட்கள், உபகரணங்கள், ஊழியர்களின் பங்களிப்பு, அவர்களுக்கே உரித்தான சுகாதார நடவடிக்கைகள், சமையலறைக்கு ஏற்ற சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளை கொண்டே, உணவு வகைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்க தலைவர் குர்பாக்ஸிஷ் சிங் கோலி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.