மும்பை கமலா மில்ஸ் தீ விபத்து : 11 பெண்கள் உள்பட 15 பேர் பலி, பிரதமர் அனுதாபம்

மும்பை கமலா மில்ஸ் தீவிபத்தில் 11 பெண்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6-வது மாடியில் பற்றிய தீயில் இருந்து தப்ப முடியாமல் பலரும் பொசுங்கியிருக்கிறார்கள்.

Mumbai Kamala Mills fire, 15 killed, PM Narendra modi
Mumbai Kamala Mills fire, 15 killed, PM Narendra modi

மும்பை கமலா மில்ஸ் தீவிபத்தில் 11 பெண்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6-வது மாடியில் பற்றிய தீயில் இருந்து தப்ப முடியாமல் பலரும் பொசுங்கியிருக்கிறார்கள்.

மும்பையில் லோயர் பேரல் பகுதியில் கமலா மில்ஸ் வளாகம் அமைந்திருக்கிறது. இங்கு ஏராளமான ரெஸ்டாரன்டுகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், மீடியா அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. இன்று அதிகாலை 12.30 மணியளவில் 6-வது மாடியில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் ஒரு ரெஸ்டாரண்டை பொசுக்கிய தீ, அடுத்தடுத்த அலுவலகங்களுக்கும் பரவியது.

மும்பை கமலா மில்ஸ் அருகிலுள்ள எம்.எம். ஜோஷிமார்க் போலீஸ் நிலைய ஆய்வாளர் அகமதுகான் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு அதிகாலை 3 மணி வரை போராடி தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து விடியும் வரை அந்த வளாகம் முழுவதும் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர வைத்தார்கள்.

இந்த விபத்தில் 11 பெண்கள் உள்பட 14 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு பலி எண்ணிக்கை 15 ஆனது. ஏராளமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள அந்த பில்டிங்கில் ரெஸ்டாரண்டில் பற்றிய தீ இந்த விபத்துக்கு காரணமா? அல்லது அவசர தேவைகளுக்காக அமைக்கப்பட்ட ஒரு ‘ஷெட்’டில் இருந்து தீ பரவியதா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

தீ பற்றியதும் அந்தக் கட்டடத்தில் இருந்து வெளியேற போதுமான வழிகள் இல்லாததால் பலரும், முகம் மற்றும் கை கால் கழுவும் ஒரு அறைக்குள் புகுந்திருக்கிறார்கள். பலியானவர்களில் பெரும்பாலானவர்களின் பிணங்கள் அங்குதான் மீட்கப்பட்டன. இந்த விபத்தை தொடர்ந்து மும்பையில் உள்ள அத்தனை வணிக வளாகங்களிலும் தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டிருக்கிறதா? என கண்காணிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் சார்பில் அவரது அலுவலக டிவிட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை முதல்வர் தேவேந்திர ஃப்ட்னாவிஸ் இரவே மாநகராட்சி ஆணையரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த கட்டட விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து, அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அலட்சியமாக இருந்து உயிர் பலி விளைவித்ததாக போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mumbai kamala mills fire 15 killed pm narendra modi

Next Story
முத்தலாக் தடை மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது : காங்கிரஸ் ஆதரவு, அதிமுக எதிர்ப்புTriple Talaq bill, Lok Sabha, AIADMK
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com