உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணத்திற்கு சென்ற இடத்தில் தன்னை நண்பரொருவர் அவரது வீட்டில் அடைத்துவைத்து ஒருவாரம் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நஹ்தௌர் காவல் நிலையத்தில், மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தன்னுடைய நண்பர் முகமதி ஃபைசல் (வயது 26) என்பவர், அவரது வீட்டில் அடைத்து வைத்து, ஒருவார காலம் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அப்பெண் தெரிவித்தார்.
மேலும், அந்த புகாரில், முகமது ஃபைசல் மும்பையில் சலூன் கடையொன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது தனக்கு அறிமுகமாகி இரண்டாண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி, பிஜ்னோர் மாவட்டம் இமம்பரா பகுதியில் நடைபெற்ற உகமது ஃபைசலின் சகோதரி திருமணத்திற்கு சென்றபோது, அப்போது அவரது குடும்பத்தினர் தன்னை வீட்டில் அடைத்துவைத்ததாகவும் அப்பெண் புகாரில் கூறியுள்ளார். மேலும், ஒருவார காலம் முகமது ஃபைசல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், முகமது ஃபைசலை காவல் துறையினர் அவரது வீட்டில் வைத்து கடந்த திங்கள் கிழமை கைது செய்தனர். இந்த புகாரை முகமது போலீசாரிடம் மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஃபைசலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே, அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன் முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அப்பெண்ணின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.