குழந்தை கடத்தல் வதந்தி... தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் 27 பேர் கொலை!

ஒன்பது மாநிலங்கள், 15 வழக்குகள், 27 கொலைகள் ஒரே வருடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பு தேடி வரும் மக்கள், மாலை ஆறு அல்லது ஏழு மணிக்கு மேல் வேலையைவிட்டு சாலையில் நடக்கின்றார்கள். முன் பின் மொழி மற்றும் மக்களைத் தெரியாத ஊர்களில் உதவிக்கு அல்லது சந்தேகத்திற்கு என்று யாரையாவது கேள்விகள் கேட்கும் போது பிரச்சனைகள் உருவாகிவிடுகின்றது.

பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பி, அவர்களை திருடர்கள் என்றும், குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்றும் கூறி சராமாரியாக அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் மக்கள்.

சம்பவம் நடக்கும் இடத்திற்கு காவல் துறையினர் வந்து சேர்வதற்கு முன்னர் பிரச்சனைகள் பெரிதாகிவிடுகிறது. மக்கள் வந்தவர்களை அடித்து கொன்றுவிடுகிறார்கள். எதற்காக தாக்கப்படுகிறோம் என்றும் தெரியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுகிறது.

கடந்த ஒரு வடத்தில் மட்டும், இது போன்று 15 பிரச்சனைகள் நடைபெற்று அதில் 27 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, அஸ்ஸாம் என்று ஒன்பது மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் பெரிதாக உருவெடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, இந்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம், அதிகரித்து வரும் வதந்திகளை குறைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆலோசித்து வருகிறது.

சில இடங்களில் காவல் துறையினர் வருவதற்கு தாமதம் ஆகும். சில இடங்களில் காவல் துறையினரையும் மீறி பிரச்சனைகள் நடைபெறுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில், காவல்துறை வாகனத்தில் பிடித்துவைத்தவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர்.

Mobbing lynching murders

Mobbing lynching murders

 

இந்தியன் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி,

மாநிலம்: ஜார்கண்ட்
தேதி: மே 18, 2017
இடம்: நகதி கிராமம், கிழக்கு சிங்பும்

கொலை செய்யப்பட்டவர்கள்: விகாஷ் வர்மா அவருடைய சகோதரர் கௌதம் வர்மா மற்றும் அவர்களுடைய நண்பர்கள் கணேஷ் குப்தா மூவரும் கழிவறைகள் கட்டும் தொழில் நடத்தியவர்கள். ஜாம்ஷெட்பூரில் இருக்கும் ஜுக்சாலை பகுதியில் வேலை முடித்துவிட்டு இரவு 8.30க்கு அவ்வழியாக செல்லும் போது ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களை குழந்தை கடத்துபவர்கள் என்று நினைத்து கொலை செய்திருக்கிறார்கள். 4 கிமீ தொலைவில் தான் காவல் நிலையம் இருக்கிறது. தாக்குதல் ஆரம்பிக்கும் போதே காவல்துறையினர் வந்துவிட்டனர்.

இடம்: சோபபூர் கிராமம்
தேதி: மே 19, 2018
நைம், ஷேக் சஜ்ஜு, ஷேக் சிராஜ், ஷேக் ஹலிம் – இந்த நான்கு நபர்களையும், கால்நடை திருடவந்தவர்கள் என்று எண்ணி 700க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு அடித்துக் கொன்றுள்ளனர்.

காவல் நிலையம் சுமார் 20 கிமீ-க்கு அப்பால் உள்ளது. சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்தே காவல் துறையினர் வந்துள்ளனர்.

வதந்தி: அங்கு வெளியாகும் இந்தி நாளிதழ் ஒன்றில் ஜாம்ஷெட்பூரில் இருக்கும் போட்கா, அசான்போனி, முசாபோனி ஆகிய இடங்களில் குழந்தை கடத்துபவர்கள் நடமாடி வருகிறார்கள் என்று வெளியிட்டது. அது பின்னர் வாட்ஸ் ஆப் மற்றும் முக நூலில் மிக வேகமாக பரவியது. இதன் விளைவாக இக்கொலைகள் அரங்கேறி உள்ளன.

மாநிலம் : தமிழகம்
தேதி: மே 9, 2018
இடம்: அத்திமூர் கிராமம் , திருவண்ணாமலை
ருக்மணி என்ற 65 வயது மூதாட்டி, தன் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று திரும்பிய வழியில், இப்பகுதியில் வழி கேட்டிருக்கிறார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தார். இதனை அறிந்த ஊர் மக்கள், குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து கடத்த வந்தவர் என்று எண்ணி அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.

காவல் நிலையம்: 3 கிமீ தொலைவில் காவல் நிலையம் இருக்கிறது. சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் காவல் துறையினர் அங்கு வந்துள்ளனர்.

வதந்தி: இப்பகுதியில் குழந்தைக் கடத்தல்கள் நடைபெறுகிறது என்று வாட்ஸ் ஆப்பில் வீடியோ ஒன்று பரவி வந்துள்ளது.

மாநிலம்: கர்நாடகா
தேதி: மே 23
இடம்: காட்டன்பேட், பெங்களூரு

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக பெங்களூரு வந்தவர். கலு ராம் என்ற அந்த 26 வயது வாலிபரை, அவரின் தோற்றத்தைப் பார்த்து குழந்தை திருடுபவர் என்று எண்ணி 50க்கும் மேற்பட்டவர்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.

காவல் நிலையம்: 2 கிமீ அருகில் காவல் நிலையம் உள்ளது. தகவல் அளிக்கப்பட்ட 10 நிமிடங்களில் காவல் துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

வதந்தி: குழந்தை கடத்துபவர்கள் பற்றி பல நாட்களாக மக்களிடம் பரவி வந்த வாட்ஸ் ஆப் வீடியோவினை கண்டு, அவரை தாக்கியுள்ளனர்.

மாநிலம்: தெலுங்கானா
தேதி: மே 23 , 2018
இடம்: ஜியபள்ளி கிராமம், நல்கொண்டா
என். பாலக்கிருஷ்ணன் என்னும், கொரெமுல்லா கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ட்ரைவர். அருகில் இருக்கும் ஜியபள்ளி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய உறவினரை காண சென்றார், கடை ஒன்றில், அவரை குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து 50க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர்.

காவல் நிலையம்: 15 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு இரவு 11.30 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் மாலை 6 மணிக்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்தி: மாணவர்கள் வாட்ஸ் ஆப் க்ரூப் ஒன்றில், இப்பகுதியில் குழந்தை கடத்துபவர்கள் அதிகமாக சுற்றி வருவதாக ஒரு செய்தி பகிரப்பட்டது.

மாநிலம்: அஸ்ஸாம்
தேதி: ஜூன் 8, 108
இடம்: பஞ்சூரி கச்சரி கிராமம்

அபிஜித் நாத் என்ற கௌஹாத்தியை சேர்ந்த காண்ட்ராக்டரையும், கோவையைச் சேர்ந்த சவுண்ட் இன்ஜினியர் நிலோத்பால் தாஸையும் குழந்தைக் கடத்துபவர்கள் என்று நினைத்து 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அடித்து கொன்றுள்ளனர்.

காவல் நிலையம்: 18 கிமீ-க்கு அப்பால் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் 8.40க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 9.10க்கு அங்கே வந்தடைந்தனர்.

வதந்தி: முகநூல் பக்கமொன்றில் இப்பகுதியில் குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாக ஒரு வதந்தி வெளியாகி உள்ளது.

Child Lifters

குழந்தை கடத்த வந்தவர்கள் என்று கொலை செய்யப்பட்ட தாஸ் மற்றும் நாத்

மாநிலம் : மேற்கு வங்கம்
தேதி: ஜூன் 13, 2018
இடம்: புல்புல் சந்தி – தூபபாரா கிராமம்
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத் தக்க ஒருவரை 60க்கும் மேற்பட்டோர் அடித்து கொன்றுள்ளனர்.

காவல் நிலையம்: 8 கிமீ-க்கு அப்பால் காவல் நிலையம் உள்ளது. அரை மணி நேரத்தில் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

தேதி: ஜூன் 23, 2018
இடம்: மாதுரி
சஞ்சய் சந்தரா என்ற 36 வயது மதிப்பு மிக்க ஒருத்தர், காலை வெயில் காரணமாக முகத்தில் கைக்குட்டையினை கட்டிவாறு, ஒரு சிறு குழந்தையிடம் பேசியிருக்கிறார். இதனை தவறாக நினைத்த மக்கள் 1000 பேர் ஒன்றாக திரண்டு அவரை அடித்துள்ளனர்.

காவல் நிலையம்: 8 கிமீ-க்கு அப்பால் காவல் நிலையம் இருக்கின்றது. சோதனைச் சாவடியில் நின்றிருந்த 2-3 காவலர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வதந்தி: இந்த இரண்டு பகுதிகளிலும் குழந்தை கடத்துபவர்கள் அதிகம் உலவுவதாக வாய் வழி வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மாநிலம்: சத்தீஸ்கர்
தேதி: ஜூன் 22, 2018
இடம்: சர்குஜா
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை 15க்கும் மேற்பட்டோர் அடித்து கொன்றுள்ளனர்.

காவல் நிலையம்: 12 கிமீ-க்கு அப்பால் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் உரிய நேரத்திற்கு வர இயலவில்லை.

வதந்தி: 500க்கும் மேற்பட்ட குழு ஒன்று சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளது என்ற வதந்தி வாட்ஸ் ஆப்பில் பரவி இருக்கிறது.

மாநிலம்: திரிபுரா
தேதி: ஜூன் 28, 2018
இடம்: சிதை மொஹன்பூர்
ஜாகீர் கான் என்னும் 30 வயதுள்ள வணிகர் அவருடைய வேனில் மூன்று உதவியாளர்களுடன் பொருட்களை விற்கச் சென்றார். சந்தேகத்தின் பெயரில் 1000 பேர் சேர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழிந்தார்.

காவல் நிலையம்: 10 கிமீ தொலைவில் தான் காவல் நிலையம் உள்ளது. தாக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கும் ராணுவ முகாமில் தஞ்சம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் காலச்சாரா மற்றும் லட்சுமிபில் பகுதியில் முறையே 33 வயது மதிக்கத்தக்க ஒருவரையும், இரண்டு பெண்களையும் சந்தேகத்தின் பெயரில் திரிபுரா மாநிலத்தில் அடித்து கொன்றுள்ளனர்.

வதந்தி: மேற்கு திரிபுரா பகுதியில் 11 வயது குழந்தையின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது என்று பரவிய வதந்தியின் காரணமாக இக்கொலைகள் நடைபெற்றுள்ளன.

மாநிலம்: மகாராஷ்ட்ரா
தேதி: ஜூலை 1
இடம்: ரயின்படா, துலே
தாதாராவ் சங்கரோ போஷ்லே, அவருடைய சகோதரன் பரத், பரத் மால்வே, ஸ்ரீமந்த் இங்ளோ, ராஜூ போஸ்லே ஆகிய ஐவரும் கோசவி என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள். 3500க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து இவர்களை அடித்து கொன்றுள்ளனர்.

Rainpada

அந்த ஐவரும் தாக்கப்பட்ட இடம், ரயின்படா கிராமம்

 

காவல் நிலையம்: அருகில் இருக்கும் காவல் நிலையம் 40 கி.மீ-க்கு அப்பால் உள்ளது. 11.10 மணிக்கு தகவல் அனுப்பப்பட்டு, 12.15 மணிக்கு காவலர்கள் அங்கு வந்தனர். 

வதந்தி: இங்கு பல்வேறு விதமான வதந்திகள் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பரவி வந்துள்ளது. வாட்ஸ் ஆப் வீடியோக்கள் மூலமாக அது மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியதின் விளைவாக இவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close