Asad Rehman
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் நடுத்தர வயது முஸ்லிம் தம்பதி வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த தம்பதியினரின் மகன் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் ஓடிச் சென்றதாகவும், இதனால் சிறுமியின் குடும்ப உறுப்பினர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சிறுமியின் சகோதரர், மைத்துனர் மற்றும் குடும்ப நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் கலவரம், கொலை, தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு போலீசார் பாதுகாப்பை நீட்டித்துள்ளதுடன், அவர்களது இருப்பிடத்தை வெளியிட மறுத்துள்ளனர். பெற்றோர் தாக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு மகன் கிராமத்தை விட்டு வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: கேரளாவில் கொலை; கத்தாரில் சதி: ‘ரேடியோ ஜாக்கி’ கொலையை போலீசார் கண்டுபிடித்தது எப்படி?
முன்னதாக, 2020 ஆம் ஆண்டில் இறந்த தம்பதியினரின் வயது வந்த மகன் சிறுமியுடன் ஒடிச் சென்ற பிறகு இரு குடும்பங்களுக்கு இடையே பகை தொடங்கியதாக காவல்துறை கூறியது. அப்போது சிறுமி மைனராக இருந்ததால் கடத்தல், கற்பழிப்பு மற்றும் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு இருவரும் மீண்டும் ஓடிவிட்டனர், இந்த முறை, சிறுமி தான் தனது துணையுடன் விருப்பத்துடன் வெளியேறியதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
இது குறித்து பேசிய சீதாபூர் காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஸ்ரா, “இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு, 50 வயது மதிக்கத்தக்க தம்பதியர் கொல்லப்பட்டது தெரியவந்தது. அக்கம்பக்கத்தில் உள்ள மற்றொரு குடும்பத்தினர் தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கியதாக அவர்களது அண்டை வீட்டினர் எங்களிடம் தெரிவித்தனர். இதில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை செய்து வருகிறோம். கிராமத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இந்த வழக்கின் விவரங்களைக் கொடுத்த ஒரு போலீஸ் அதிகாரி, “இறந்த தம்பதியின் 28 வயது மகன் மீது, 2020 இல் ஒரு மைனர் பெண்ணுடன் ஓடியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன், சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்து வயது வந்ததால், இருவரும் மீண்டும் ஓடிவிட்டனர். தற்போது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர், ஆனால் இந்த முறை சிறுமி தனது துணைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை அளித்தார். அந்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு தனி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil