உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தனது கணவர் மதமாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, முத்தலாக் வழக்கைத் தவிர்க்கவும், 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டுகளில் இருந்து விலகி இருக்கவும் தனது கணவர் மதம் மாறும் வழியைத் தேர்ந்தெடுத்ததாக அந்தப் பெண் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது முஸ்லிம் இளைஞர் இந்து மதத்திற்கு மாறுவதற்கான விண்ணப்பம், குறித்து, அவர் இந்து பெண்ணை திருமணம் செய்ய மதம் மாற விரும்புவதாக அவரது மனைவி கூறியதை அடுத்து சர்சையைக் கிளப்பியுள்ளது. முத்தலாக் வழக்கைத் தவிர்க்கவும், 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டுகளில் இருந்து விலகி இருக்கவும் தனது கணவர் மதம் மாறும் வழியைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார்.
மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அளித்த விண்ணப்பத்தில், முஸ்லிம் இளைஞர் அமீர் அலி இந்த விஷயத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு கோரியுள்ளார்.
“சட்டப்படி, 18 வயது நிரம்பியவர்கள் மதம் மாறத் தயாராக இருந்தால், அதிகாரியிடம் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், இந்த வழக்கில், அவரது மனைவியும் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார். தற்போதுள்ள சட்டங்களை வைத்து தனது கணவர் தந்திரமாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த எஸ்.பி ஆகியோரை நான் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் உண்மையைக் கண்டறிய பிரச்னையை ஆராயும்படி கேட்டுக் கொண்டேன்” என்று மாவட்ட மாஜிஸ்திரேட் சைலேந்திர குமார் சிங் கூறினார்.
அமீர் அலி காஜியாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், முகல்புரா காவல் எல்லைக்குட்பட்ட பிரின்ஸ் சாலையில் வசிப்பவர் என்றும் மொராதாபாத் போலீசார் தெரிவித்தனர்.
“அவர் மதமாற அனுமதி கோரி உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளார்” என்று முகல்புரா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அமித் குமார் கூறினார்.
அமீர் அலியின் மனைவி குல்பான்சா (19) தம்பதிக்கு நான்கு மாத பெண் குழந்தை உள்ளது. செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம் அந்த பெண், தனது கணவர் 2014 முதல் இந்து பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாகக் கூறினார்.
“நான் பிப்ரவரி 2022-ல் திருமணம் செய்துகொண்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களது உறவைப் பற்றி தெரியவந்தது. நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அவர் அந்த பெண்ணிடம் இருந்து விலகி இருப்பேன் என்று உறுதியளித்தார். இவர்களது விவகாரத்தை ‘லவ் ஜிகாத்’ வழக்காக மாற்றுவதாக அவரது காதலி மிரட்டியுள்ளார். என்னை விவாகரத்து செய்தால் என் குடும்பத்தினர் அவர் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வார்கள். மதமாற்றத்திற்கு அனுமதி கோரி அவர் ஏன் தந்திரமாக செயல்படுகிறார் என்பதை இது விளக்குகிறது” என்று அவர் கூறினார். முத்தலாக், ஷரியா சட்டத்தின் கீழ் விவாகரத்து செயல்முறை, கணவன் மூன்று முறை 'தலாக்' என்று உச்சரிப்பதன் மூலம் தனது மனைவியை விவாகரத்து செய்யலாம். இது இந்தியாவில் சட்டவிரோதமானது மற்றும் கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக குல்பான்சா கூறினார். “நான் உங்கள் மகள், இந்தப் பிரச்சினையில் உங்கள் மகளைப் பாதுகாக்க நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று முதலமைச்சரிடம் குல்பான்சா வேண்டுகோள் விடுத்தார்.
மேல்ம், அமீர் அலி செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, பிரின்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீடு வெளியில் இருந்து பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதால், தான் தனது பெற்றோருடன் தங்கியிருந்ததாக அவரது மனைவி குல்பான்சா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"