2017 ஆம் ஆண்டு முக்யமந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஹர்னியில் உள்ள வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனின் (VMC) குறைந்த வருமானம் கொண்டோர் குடியிருப்பு வளாகத்தில், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் 44 வயது முஸ்லீம் பெண்ணுக்கு குடியிருப்புப் பகுதி ஒதுக்கப்பட்ட போது, அவர் தனது மைனர் மகனுடன் அங்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
இருப்பினும், அவர் அங்கு செல்வதற்கு முன்பே, 462 குடியிருப்புகளை உள்ளடக்கிய 33 குடியிருப்பாளர்கள் ஒரு 'முஸ்லிம்' அங்கு வருவதை ஆட்சேபித்து, "அச்சுறுத்தல் மற்றும் தொல்லை ஏற்படக் கூடும்" எனக் கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ புகார் அனுப்பியுள்ளனர்.
குடியிருப்பு வளாகத்தில், பிளாட் ஒதுக்கப்பட்ட ஒரே முஸ்லீம் பெண் அவர் மட்டும் தான், என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வதோதரா முனிசிபல் கமிஷனர் திலீப் ராணாவை தொடர்பு கொள்ள முயன்றபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. நகராட்சி துணை ஆணையர் அர்பித் சாகர் மற்றும் குறைந்த வருமான வீட்டுவசதிக்கான நிர்வாக பொறியாளர் நிலேஷ்குமார் பர்மர் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
44 வயது பெண், கூறுகையில், 2020 ஆம் ஆண்டில் தனது வீட்டு ஒதுக்கீட்டை செல்லாததாக்கக் கோரி குடியிருப்பாளர்கள் முதலமைச்சர் அலுவலகத்திற்கு (CMO) கடிதம் எழுதியபோது போராட்டங்கள் முதன்முதலில் தொடங்கியது.
இருப்பினும், ஹர்னி காவல் நிலையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்து புகாரை முடித்து வைத்தது. இதே பிரச்னைக்கு எதிராக சமீபத்தில் ஜூன் 10ம் தேதி போராட்டம் நடந்தது.
”நான் வதோதராவில் எல்லா மதத்தினரும் வசிக்கும் பகுதியில் வளர்ந்தேன், என் குடும்பம் கெட்டோஸ் என்ற கருத்தை ஒருபோதும் நம்பவில்லை…
என் மகன் அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுப்புறத்தில் வளர வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன் ஆனால் ஏறக்குறைய ஆறு வருடங்களாகியும் நான் எதிர்கொண்ட எதிர்ப்பிற்கு தீர்வு கிடைக்காததால் எனது கனவுகள் சிதைந்துவிட்டன. என் மகன் இப்போது 12 ஆம் வகுப்பில் படிக்கிறான், என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வயதில் இருக்கிறான். பாகுபாடு அவனை மனதளவில் பாதிக்கும்,” என்று அவர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
பொது நலனுக்கான பிரதிநிதித்துவம் என்று கூறி, மாவட்ட ஆட்சியர், மேயர், விஎம்சி கமிஷனர் மற்றும் வதோதராவில் உள்ள போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அளித்த புகாரில் கையொப்பமிட்ட 33 பேர் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை செல்லாததாக்க வேண்டும், பயனாளியை வேறொரு வீட்டுத் திட்டத்திற்கு மாற்ற வேண்டும், என்று கோரியுள்ளனர்.
மோட்நாத் ரெசிடென்சி கோஆபரேடிவ் ஹவுசிங் சர்வீசஸ் சொசைட்டி லிமிடெட்டின் குறிப்பாணையில்: ”மார்ச் 2019 இல் சிறுபான்மைப் பயனாளி ஒருவருக்கு K204 என்ற வீட்டை விஎம்சி ஒதுக்கியுள்ளது... ஹர்னி பகுதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் அமைதியான பகுதி என்றும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் முஸ்லிம்கள் குடியேற்றம் இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம் 461 குடும்பங்களின் அமைதியான வாழ்க்கைக்கு… இது தீ வைப்பது போன்றது” என்று கூறுகிறது.
முஸ்லீம் குடும்பங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டால் "உடனடி சட்டம்-ஒழுங்கு நெருக்கடி" ஏற்படும், என்று காலனியில் வசிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கையொப்பமிட்டவர்களில் ஒருவர், “ இது விஎம்சியின் தவறு, அவர்கள் ஒதுக்கப்பட்டவரின் சான்றிதழ்களை அவர்கள் சரிபார்க்கவில்லை. இந்துக்கள் வசிக்கும் பகுதி என்பதாலும், பிற மத மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ளவர்கள் எங்கள் காலனியில் வசிப்பதை விரும்ப மாட்டோம் என்பதாலும் நாங்கள் அனைவரும் இந்த காலனியில் வீடுகளை முன்பதிவு செய்துள்ளோம் என்பது பொதுவான ஒருமித்த கருத்து. இதில் இரு தரப்பினரின் வசதியும் உள்ளது”, என்று கூறினார்.
பயனாளியின் பக்கத்து வீட்டுக்காரர் மேலும் கூறுகையில், காலனியில் உள்ள பல குடும்பங்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருந்தபோதிலும், வேறுபட்ட மதத்தினர் வருவது குடியிருப்பாளர்களிடையே கவலையைத் தூண்டியது.
சிறுபான்மைக் குடும்பம் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருப்பது எங்களுக்கு வசதியாக இல்லை… இது உணவு விருப்பத்தேர்வுகளைப் பற்றியது மட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பற்றியது, என்று பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்.
அந்த பெண் தற்போது தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வதோதராவின் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார்.
”இந்த எதிர்ப்பின் காரணமாக நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை விற்க விரும்பவில்லை. நான் காத்திருப்பேன்... காலனி நிர்வாகக் குழுவிடம் நேரம் கேட்டு பலமுறை முயற்சி செய்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்கள் தங்கள் சமீபத்திய எதிர்ப்பைப் பகிரங்கப்படுத்திய இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்கள் பராமரிப்பு நிலுவைத் தொகையைக் கேட்டு என்னை அழைத்தனர்.
அவர்கள் என்னிடம் ஒப்படைக்காத குடியிருப்பாளர் என்ற சான்றிதழை என்னிடம் வழங்கினால், அதை செலுத்தத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.
VMC ஏற்கனவே அனைத்து குடியிருப்பாளர்களிடமிருந்தும் ஒரு முறை பராமரிப்பு கட்டணமாக ரூ 50,000 வசூலித்தது, நான் ஏற்கனவே செலுத்தினேன். இந்த வீட்டுக் காலனியில் வசிக்கும் உரிமையை அரசாங்கம் மறுக்காததால், நான் சட்டப்பூர்வ ஆதரவைப் பெற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை”, என்று கூறினார்.
இருப்பினும், காலனியின் மற்றொரு குடியிருப்பாளர், பயனாளிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இது நியாயமற்றது, ஏனென்றால் அவள் ஒரு அரசாங்க திட்டத்தின் பயனாளி மற்றும் சட்ட விதிகளின்படி பிளாட் ஒதுக்கப்பட்டிருக்கிறது… குடியிருப்பாளர்களின் கவலைகள் நியாயமானது. ஆனால், நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமலே அவர்கள் எப்படி என தீர்மானிக்க முடியாது, என்றார்.
விஎம்சியின் வீட்டுவசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு திட்டங்கள் விண்ணப்பதாரர்களையும் பயனாளிகளையும் மத அடிப்படையில் பிரிக்காததால், விதிமுறைகளின்படி வீடு ஒதுக்கப்பட்டது.
இது இரு தரப்பினராலும் தீர்க்கப்பட வேண்டிய விஷயம் அல்லது திறமையான நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும், என்று ஒரு அதிகாரி கூறினார்.
Read in English: Muslim woman allotted flat under CM scheme in Vadodara, residents protest
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.