ஜூலை 31-ம் தேதி நூஹில் நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்கள் கிராமங்களுக்குள் நுழைவதை தடை விதிக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சர்பஞ்ச்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் பஞ்சாயத்துகளுக்கு ஹரியானா அரசு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது.
ஹரியானா கிராம பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் 51-வது பிரிவின் கீழ் பல கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சர்பஞ்ச்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகளால் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரியானா கிராம பஞ்சாயத்து ராஜ் சட்டம், 51-வது பிரிவு , இது ஒரு சர்பஞ்ச் அல்லது பஞ்ச் இடைநீக்கம் மற்றும் நீக்கம் தொடர்பானது ஆகும்.
இந்த நடவடிக்கையை உறுதி செய்த, ரேவாரி துணை ஆணையர் முகமது. இம்ரான் ராசா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “கிராம பஞ்சாயத்துகள், அவற்றின் சர்பஞ்ச்கள் போன்றவர்கள் மீது நிர்வாக நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் <கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சர்பஞ்ச்கள்> தங்கள் பதில்களை அனுப்புவார்கள், அவை ஆய்வு செய்யப்படும். அவர்கள் அளிக்கும் பதில்களை ஆய்வு செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ரேவாரி மாவட்டத்தில் இதுபோன்ற சில கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சர்பஞ்ச்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று ராசா கூறினார். இந்த விஷயத்தில் வழக்குப் பதிவு செய்வதா அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் மட்டுமே சொல்ல முடியும் என்றார்.
இருப்பினும், ரேவாரி காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சஹாரன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "இது தொடர்பாக நீங்கள் துணை ஆணையரிடம் பேசுவது நல்லது, ஏனெனில் இது மிகவும் முக்கியமான விஷயம்" என்றார்.
காவல்துறை தலைமை இயக்குனர் பி.கே அகர்வாலை தொடர்பு கொள்ள முடியவில்லை. எவ்வாறாயினும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாநில அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 10 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ரேவாரி, ஜஜ்ஜார் மற்றும் மகேந்திரகர் மாவட்டங்களில் உள்ள பல கிராம பஞ்சாயத்துகள் நூஹ் வகுப்புவாத வன்முறைக்கு வெளிப்படையான எதிர்வினையாக இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றியதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஹரியானா வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் தேவேந்திர சிங் பாப்லி கூறுகையில், “இந்தப் பிரச்சினை பற்றி நான் அறிவேன். ஒரு சில இடங்களில் இதுபோன்ற தீர்மானங்களை சிலர் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் இதுபோன்ற செயல்கள் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது. அத்தகைய உத்தரவுகளை வழங்குவதில் யாரேனும் ஈடுபட்டால், சட்டத்தின்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நான் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்“ என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.