முசாபர்நகரில் உள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை குப்பாபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர், இங்கு தான் இந்த வார தொடக்கத்தில் ஆசிரியர் சொல்லியதால் ஏழு வயது சிறுவன் மற்ற மாணவர்களால் அடிக்கப்பட்டான்.
ஆசிரியை திரிப்தா தியாகி (60), சிறுவனின் மதத்தைக் குறிப்பிட்டு, “முகமதியக் குழந்தைகளை” இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அவர் மற்ற மாணவர்களிடம் சிறுவனை "கடுமையாக" அடிக்கச் சொன்னார். கணக்கு பாடம் படித்த போது பெருக்கல் வாய்ப்பாட்டில் செய்த தவறுக்காக தாக்கப்பட்டதாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேஹா பப்ளிக் பள்ளி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை திரிப்தா தியாகிக்கு சொந்தமானது.
திரிப்தா தியாகி மீது வியாழன் அன்று IPC பிரிவுகள் 323 (காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகள் என்பதால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ வெள்ளிக்கிழமை வைரலானது, இது ஆசிரியர் மற்றும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அந்த வீடியோவில், அந்த சிறுவனை அடிக்கும்படி சக மாணவர்களிடம் தியாகி கூறுவது கேட்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, கல்வி அதிகாரி சுபம் சுக்லா, “நாங்கள் விசாரணை நடத்தினோம்... பள்ளியானது துறையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.
பள்ளிக்கு சீல் வைக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், மேலும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை அடித்ததற்காக ஆசிரியருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
பெயர் வெளியிட மறுத்த மற்றொரு அதிகாரி, "இந்த கட்டிடம் கட்டுமானத்தில் உள்ளது, ஆசிரியர் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு கற்பித்தார். குழந்தைகளுக்கான மின்விசிறிகளோ விளக்குகளோ இல்லை. 1 முதல் 5 வகுப்புகளுக்குப் பிரிவுகள் எதுவும் இல்லை. தற்போது அதற்கு சீல் வைத்துள்ளோம், என்றார்.
உத்தர பிரதேச கல்வி வாரியத்திடம் இருந்து பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து 50 மாணவர்களும் ஒரு வாரத்திற்குள் ஒரு அரசு பள்ளி அல்லது மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள், என்று அதிகாரி கூறினார். சிறுவனின் குடும்பத்தினர் ஏற்கனவே பள்ளியில் இருந்து வெளியேறி, புதிய பள்ளியைத் தேடி வருகின்றனர்.
பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து, தியாகி மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். கிராம மக்கள் தொந்தரவு செய்ததாகவும், அதனால் கவலை அடைந்ததாகவும் கூறினர்.
கிராமத்தில் 375 குடும்பங்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் மட்டுமே உள்ளன - 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட ஒரு அரசு பள்ளி மற்றும் 2019 இல் பதிவு செய்யப்பட்ட நேஹா பப்ளிக் பள்ளி.
குப்பாபூரில் உள்ள கிராமவாசிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், மற்ற அனைத்து தனியார் பள்ளிகளும் சற்று தொலைவில் உள்ளது, என்றனர். அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேஹா பப்ளிக் பள்ளியில் பெற்றோர்கள் மாதத்திற்கு ரூ 300-500 செலுத்தினர், மற்ற பள்ளிகள் மாதக் கட்டணம் ரூ 1,500-ரூ 2,000 வசூலிக்கின்றன, இது பல குடும்பங்களால் தர முடியாது.
இதற்கிடையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), ஆசிரியருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கவும், FIR பதிவு செய்யவும் முசாபர்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது. மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009 இன் பிரிவு 17 (குழந்தைக்கு உடல் ரீதியான தண்டனை/மனரீதியான துன்புறுத்தல்) கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முசாபர்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“