மியான்மர் நிலநடுக்கம்; 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: நிவாரண பணிக்காக மீட்பு குழுவினரை அனுப்பிய இந்தியா

மியான்மரில் ராணுவ தலைமையிலான அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன், பிரதமர் மோடி நேற்று (மார்ச் 29) தொலைபேசியில் உரையாடினார்.

மியான்மரில் ராணுவ தலைமையிலான அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன், பிரதமர் மோடி நேற்று (மார்ச் 29) தொலைபேசியில் உரையாடினார்.

author-image
WebDesk
New Update
Rescue Team

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,644-ஐ கடந்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் இருந்து ஆப்ரேஷன் பிரம்மா குழுவினர் மியான்மருக்கு மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரேஷன் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளுடன் இந்த மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Myanmar quake toll over 1,600, India sends relief, rescue teams

 

Advertisment
Advertisements

மியான்மரில் ராணுவ தலைமையிலான அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன், பிரதமர் மோடி நேற்று (மார்ச் 29) தொலைபேசியில் உரையாடினார். பிப்ரவரி 2021-ஆம் ஆண்டு அங்கு ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னர் நடைபெற்ற முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

"மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன் பேசினேன். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொண்டேன். நமது நண்பராகவும், அண்டை நாடாகவும் திகழ்வதன் பொருட்டு மியான்மரின் இந்த சோதனை காலத்தில் அவர்களுடன் இந்தியா துணை நிற்கும்" என மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த வாரம் பாங்காக்கில் நடைபெறவுள்ள பி.ஐ.எம்.எஸ்.டி.இ.சி உச்சி மாநாட்டில் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கும் கடவுளான பிரம்மாவின் பெயரில் ஆப்ரேஷன் பிரம்மா என்று மீட்புக் குழுவினருக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டி எழுப்பும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் குழுவினர், பல்வேறு நிவாரண பொருட்களை கொண்டு செல்கின்றனர். மேலும், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு பணிகளையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.

விமானப் படைகள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலம் இதுவரை 137 டன் அளவிற்கு நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேவைக்கேற்ப கூடுதல் உதவியும் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தியா, இரண்டு கடற்படைக் கப்பல்களை அண்டை நாட்டிற்கு அனுப்பியுள்ளது" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். விமானம் மூலமாக மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் அனுப்பப்படுவதுடன் ஆக்ராவிலிருந்து 118 உறுப்பினர்களைக் கொண்ட கள மருத்துவமனையும் அனுப்பப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியக் கடற்படைக் கப்பல்களான ஐ.என்.எஸ் சத்புரா மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி ஆகியவை, மியான்மரில் உள்ள யாங்கூன் துறைமுகத்துக்கு டன் கணக்கில் நிவாரண பொருட்களை கொண்டு சென்றதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அதன்படி, "இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ஐ.என்.எஸ் சத்புரா மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி ஆகியவை 40 டன் நிவாரண பொருட்களுடன் யாங்கூன் துறைமுகத்தை நோக்கிச் செல்கின்றன" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

80 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) பணியாளர்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டனர். மேலும், வலுவான கான்கிரீட் கட்டர்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் சுத்தியல் போன்ற மீட்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"காஜியாபாத்தில் உள்ள ஹிண்டனில் இருந்து 80 என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் கொண்ட குழு, மியான்மருக்கு அனுப்பப்பட்டது" என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், மீட்பு பணிகளுக்கும் உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களும் இந்தக் குழுவினருடன் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியா விமானப்படையின் C130, நேற்றைய தினம் (மார்ச் 30) நே பியி தாவில் தரையிறங்கியது எனவும், இதனை இந்திய தூதர் அபய் தாக்கூர் மற்றும் மியான்மரின் தூதர் மவுங் மாங் லின் ஆகியோர் வரவேற்றதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 36 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் 10 டன் நிவாரண பொருட்கள் கொண்ட இரண்டாவது விமானம் இன்று திரையிறங்கவுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மோஹ்சென் ஷாஹேதி, அடுத்த 24 - 48 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்றும், களத்தில் வீரர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தவிர இன்று (மார்ச் 30) காலை மாண்டலேவுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் செல்கிறனர். அப்பகுதியை அடையும் முதல் வெளிநாட்டு மீட்பு குழு இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்குள்ள விமான நிலையம் இன்னும் முழுமையாக செயல்படாத நிலையில், மியான்மரின் தலைநகரான நே பியி தாவில், முதன்முதலாக இந்தியா தனது மீட்பு குழுவினரை அனுப்புகிறது. 

மேலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மீட்பு படையினர் மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாள நிலநடுக்கத்தின் போது ஆபரேஷன் மைத்ரி மற்றும் 2023 ஆம் ஆண்டு துருக்கியே நிலநடுக்கத்தின் போது ஆபரேஷன் தோஸ்த் ஆகிய பெயரின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படையினரை இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களில் கூடாரங்களை அமைக்க தேவையான உபகரணங்கள், போர்வைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் உள்ளிட்டவை எடுத்துக் செல்லப்பட்டன. இவற்றை மக்களுக்கு சரியான முறையில் பகிர்ந்து அளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சுமார் 15 ஆயிரம் இந்திய குடும்பங்கள் வசிப்பதாகவும், இவர்களின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் நிலநடுக்கத்தால் இந்தியர்கள் உயிரிழந்ததாக இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

- Divya A

Myanmar India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: