உ.பி.யில் தோற்ற பாஜக.வை ஏறி அடிக்கும் நாயுடு : பணிவாரா மோடி?

தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலமாகவும் ‘டபுள் பஞ்ச்’ கொடுத்தது.

தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலமாகவும் ‘டபுள் பஞ்ச்’ கொடுத்தது.

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆளும் கட்சி! பாஜக.வுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டது. மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசமும், மாநில அமைச்சரவையில் பாஜக.வும் இடம் பெற்றன.

ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். 2014-ம் ஆண்டு ஆந்திர மாநில பிரிவினைச் சட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிப்படி இதை நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. வட கிழக்கு மாநிலங்களைத் தவிர, வேறு எங்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க சட்டத்தில் இடமில்லை என கை விரித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 8-ம் தேதி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம் பிரதிநிதிகளான பி.அசோக் கஜபதி ராஜூ, ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர் பதவி விலகினர்.

தெலுங்கு தேசத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாஜக பிரதிநிதிகளும் அமைச்சர் பதவிகளை உதறினார்கள். ஆனாலும் பாஜக.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகவில்லை.

N Chandrababu Naidu, Narendra Modi, No confidence Motion

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நோட்டீஸ்

ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த விவகாரத்தில் புகுந்து அரசியல் செய்ய ஆரம்பித்தது. மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக நோட்டீஸ் கொடுத்தது அந்தக் கட்சி. இது பாஜக.வுக்கு மட்டுமல்ல, தெலுங்கு தேசத்திற்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்தது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரித்தே தீரவேண்டிய கட்டாயம் நாயுடுவுக்கு! எனவே இதற்கு மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியாது என்கிற முடிவுக்கு நாயுடு வந்தார்.

சந்திரபாபு நாயுடு இன்று காலை ‘டெலிகான்ஃபரன்ஸ்’ மூலமாகவே தனது கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தார். உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் சார்பிலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாகவும் அறிவித்தார் அவர். தெலுங்கு தேசத் தலைவர்களில் ஒருவரான தோட்டா நரசிம்மன் இன்று அதற்கான நோட்டீஸை லோக்சபாவில் கொடுத்தார்.

மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் முடிவை மம்தா பானர்ஜி வரவேற்றிருக்கிறார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ரகு வீரரெட்டி, ‘காங்கிரஸ் இதை ஆதரிக்கும்’ என கூறியிருக்கிறார்.

எனினும் பாஜக.வுக்கு தனியாகவே மக்களவையில் மெஜாரிட்டியைவிட கூடுதலாக 2 எம்.பி.க்கள் ( 274 எம்.பி.க்கள்) ஆதரவு இருக்கிறது. அதிமுக.வின் 37 எம்.பி.க்களும் காவிரி பிரச்னைக்காக போராடி வருகிறார்களே தவிர, ஆந்திராவின் தேவைக்காக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவர்கள் ஆதரிக்கும் வாய்ப்பு இல்லை. எனவே நடப்பு கூட்டத் தொடரில் இந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் அரசுக்கு ஆபத்து இல்லை.

ஆனால் உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்களவை இடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிறகு கூட்டணிக் கட்சியே பாஜக.வுக்கு எதிராக திரும்புவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜக அணியில் இருந்து விலகும் முன்பு தனது கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களுடன் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘பாஜக.வின் செல்வாக்கு தேசிய அளவில் சரிந்து வருகிறது. தமிழ்நாட்டில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே நடத்திய அரசியலைப் போல ஆந்திராவில் தெலுங்கு தேசத்திற்கு எதிராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸையும் நடிகர் பவன் கல்யாணையும் பயன்படுத்த நினைக்கிறது’ என குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார்.

கூட்டணியில் இருந்து விலகல், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என ஒரே வேளையில் மத்திய அரசுக்கு ‘டபுள் பஞ்ச்’ வைத்திருக்கிறார் நாயுடு. ஆனால் அடுத்தடுத்து நாயுடு இத்தனை ‘மூவ்’களை எடுத்து வைத்தாலும், மத்திய அரசு இதை கண்டு கொள்ளவே இல்லை. நரேந்திர மோடி இதற்கு பணிவதாகவோ, ரெஸ்பான்ஸ் செய்வதாகவோ இல்லை.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close