இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் மோடேரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்து, பிரதமர் மோடியை கடுமையான பேச்சுவார்த்தையாளர் என்று பாராட்டினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியாவுடன் இரண்டு நாள் பயணமாக இந்திய வருகை தந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். அவருக்கு வழி நெடுக மக்கள் கூட்டம் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அதிபர் டிரம்ப், மெலனியா, பிரதமர் மோடி அங்கே டிரம்ப் காந்தியின் ராட்டையை சுற்றிப் பார்த்தார். பின்னர், காதியின் தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே என்ற தத்துவத்தைக் கூறும் மூன்று குரங்கு பொம்மைகளைக் காண்பித்து அதைப் பற்றி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.
இதையடுத்து, மோடேரா விளையாட்டு மைதானம் திறப்பு விழாவில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க டிரம்ப், மெலனியாவுடன் சென்றார். அங்கே அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப்பை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “ஐந்து மாதங்களுக்கு முன்பு, நான் ஹவ்டி மோடி என்ற நிகழ்வுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று, எனது சிறந்த நண்பர் டிரம்ப் இந்தியாவில் அகமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' உடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்” என்று கூறினார். மேலும், பிரதமர் மோடி‘இந்தியா- அமெரிக்கா நட்பு பல்லாண்டு நீடிக்க வேண்டும்’ என்று கூட்டத்தினரை பார்த்து கோஷம் எழுப்பச் செய்தார்.
இதையடுத்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு, டெக்சாஸில் உள்ள ஒரு மாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் பிரதமரை வரவேற்றது. இன்று, அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா எங்களை வரவேற்றுள்ளது.
அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு விசுவாசமாக இருக்கும். நீங்கள் அமெரிக்க மக்களுக்கு ஒரு பெரிய மரியாதை செய்துள்ளீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கு நாங்கள் எப்போதும் நன்றி செலுத்துவோம். பிரதமர் மோடியின் வாழ்க்கை இந்த தேசத்திற்கான வரம்பற்ற வாக்குறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர் இளைஞராக இருந்தபோது, ஒரு உணவு விடுதியில் பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்வேன், அவர் மிகவும் கடினமானவர். இன்று, அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள். உங்கள் உயர்வு பற்றிய நம்பமுடியாத கதை உங்களிடம் உள்ளது.
இந்தியா எப்போதும் போற்றப்படும் நாடு; கோடிக்கணக்கான இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இங்கே வழிபடுகிறார்கள். ஒரு சிறந்த இந்திய தேசமாக நீங்கள் எப்போதும் வலுவாக நிற்கிறீர்கள்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் பாலிவுட் படங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்தியா சுவாமி விவேகானந்தர், சச்சின், விராட் கோலி போன்றவர்களையும் உலகுக்குத் தந்துள்ளது. இந்த உலகில் உள்ள மக்கள் பாலிவுட் பாடங்களை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஷோலே, தில்வாலே துல்லேனியா லே ஜாயேங்கே உள்ளிட்டப் படங்களை உலக மக்கள் விரும்பிப் பார்த்தார்கள். சச்சின், விராட் போன்ற வீரர்களால் நீங்கள் உற்சாகம் அடைகிறீர்கள்.
முதல் பெண்மணியும் நானும் உப்பு சத்தியாக்கிரக யாத்திரைக்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியின் ஆசிரமத்தைப் பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைந்தோம். நாளை, இந்த மாபெரும் நபரின் நினைவாக டெல்லியில் மாலை அணிவிப்போம். இன்று, தாஜ்மஹால் நினைவுச்சின்னத்தை பார்வையிட உள்ளோம்.
நாங்கள் தொடர்ந்து எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புகையில், இந்தியாவுக்கு இந்த கிரகத்தின் மிகச் சிறந்த, மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா எதிர்நோக்குகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ஆயுதங்களை நாங்கள் இந்தியாவுடன் இணைந்து கையாள்கிறோம்.
தீவிர இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. எனது நிர்வாகத்தின் கீழ், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் இரத்தவெறி கொலையாளிகள் மீது அமெரிக்க இராணுவத்தின் முழு அதிகாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டோம். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பிராந்திய கலிபா 100% அழிக்கப்பட்டுள்ளது. அல் பாக்தாதி இறந்துவிட்டார்.
இந்தியா மனிதகுலத்திற்கு நம்பிக்கையைத் தருகிறது. வெறும் 70 ஆண்டுகளில், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறியுள்ளதுடன், உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் கீழ், இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. மேலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இணையம் கிடைத்துள்ளது. இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தின் வீடாக மாறும். ஈர்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடாகவும் சகிப்புத்தன்மையுள்ள நாடாகவும் சாதித்துள்ளது. இந்தியாவின் சாதனை நிகரற்றது.
பாகிஸ்தானுடனான எங்கள் உறவு மிகச் சிறந்த ஒன்று. இந்த முயற்சிகளுக்கு நன்றி. நாங்கள் பாகிஸ்தானுடனான பெரிய முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காணத் தொடங்கியள்ளோம்.
இன்று இந்தியா ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பும் உலக சாதனையை உருவாக்குவது மட்டுமல்லாமல், விரைவான நிதி சேர்க்கை பற்றிய உலக சாதனையையும் உருவாக்கியுள்ளது.
எல்லைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு. தெற்காசியாவில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா நாளை ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்தியாவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. தனது ஆட்சிக் காலத்தில் இந்திய மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி வெளியே கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பு, விடா முயற்சி, பக்திக்கும் உதாரணமாக திகழ்கிறார் என்றும் கூறினார்.
இந்தியர்கள் தாங்கள் விரும்பும் எதையும் அடைந்துவிடுவார்கள். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை தற்போது குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியாவுடன் இணைந்து அமரிக்கா செயல்படும். பயங்கரவாதத்தால் இந்தியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டன.
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலப்படுத்தப்படுவது குறித்து பேச உள்ளேன். பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்துக்கு விற்க உள்ளோம்.” இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.