குஜராத்தில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் மோடேராவில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, நான் ஹவ்டி மோடி நிகழ்சி உடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று, எனது சிறந்த நண்பர் டிரம்ப் இந்தியாவில் அகமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' உடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.” என்று கூறினார்.
இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் 'நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான மோடேராவில் நடைபெற்றது.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்றுப் பேசியதாவது: “இன்று வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, நான் ஹவ்டி மோடி நிகழ்சி உடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று, எனது சிறந்த நண்பர் டிரம்ப் இந்தியாவில் அகமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' உடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியா- அமெரிக்கா நட்பு பல்லாண்டு நீடிக்க வேண்டும்.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின் பெயரில் உள்ள 'நமஸ்தே' என்பதன் பொருள் மிகவும் ஆழமானது. அது உலகின் பழமையான மொழி சமஸ்கிருதத்திலிருந்து வந்த சொல். இதன் பொருள், குறிப்பிட்ட நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்று அர்த்தம்.
இந்தியாவும், அமெரிக்காவும் தங்களுக்குள் நிறைய பகிர்ந்துகொள்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை லட்சியங்கள், புதுமையான யோசனைகள், வாய்ப்புகள், சவால்கள், நம்பிக்கை மற்றும் திட்டங்களாகும்.
இந்தியா-அமெரிக்கா இடையில் இனி சாதாரண உறவு என்பதைக் கடந்து மிகப் பெரிய மற்றும் நெருக்கமான நட்புறவாக மலர்ந்துள்ளது. இது குஜராத் ஆக இருந்தாலும் முழு நாடும் உங்களை வரவேற்பதில் உற்சாகமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை நான் வரவேற்கிறேன். குஜராத்தில் இருந்தாலும், நீங்கள் இங்கு காணும் உணர்வுகள் இந்தியாவிலிருந்து வந்தவை.
ஒரு நாடு சுதந்திர மக்களுக்கானது, மற்றொன்று உலகம் ஒரே குடும்பம் என்று நம்புகிறது. ஒரு நாடு 'சுதந்திரதேவி சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறது, மற்றொரு நாடு 'ஒற்றுமையின் சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறது.
அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா இந்தியா வருகை தந்துள்ளது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அமெரிக்காவுக்காக நீங்கள் செய்த பணி அதன் பலனைத் தருகிறது. குழந்தைகள் மற்றும் சமூகத்திற்காக நீங்கள் செய்த பணி பாராட்டத்தக்கது.” என்று இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பின்னர், அதிபர் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக அரங்கத்தில் இருந்து அனைவரையும் எழுந்து நின்று கைகளைத் தட்டி கோஷமிடச் செய்து உற்சாகமாக வரவேற்றார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான மோடேரா விளையாட்டு அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியைக் காண சுமார் 1 லட்சம் பேர் பார்வையாளர்களாக இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.