இன்று காலை உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிஷிமாத் பகுதியில் நந்தா தேவி பனிப்பாறை உருகியது. இதனால், ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கில் அலக்நந்தா ஆற்றில் கட்டப்பட்ட ரிஷிகங்கா அணை சேதமடைந்தது.
ரிஷிகங்கா மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிர் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மாநில நிவாரண ஆணையர் ரிதிம் அகர்வால் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் சாமோலி மலைப்பகுதி நிர்வாக அதிகாரிகளுடன் பாதிப்பு நிலைமையை கேட்டறிந்தார். அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், கங்கை நதிக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தார். முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு வீடியோக்கள் மூலம் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட் கணக்கில், " உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு குறித்து, முதல்வர் டி.எஸ். ராவத், இந்திய - திபெத் எல்லை காவல் படை (ஐ.டி.பி.பி.) , தேசிய பேரிடர் மீட்பு படை ஆணையரிடம் பேசினேன். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மீட்புப் பணியில் தங்களை தீவிரமாக ஈடுபத்திக் கொண்டுள்ளன. தேவபூமிக்கு சாத்தியமான ஒவ்வொரு உதவியும் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், " உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் ரெய்லி கிராமத்தில் நிகழ்ந்த பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கு சம்பவம் மிகவும் துயரமானது. உத்தரகண்ட் மக்களுடன் எனது இரங்கல். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாநில அரசு உடனடி உதவிகளை வழங்க வேண்டும். நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் சகாக்களும் கைகோர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.