Bharat Ratna Award | PM Modi: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் நரசிம்ம ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்ரி சரண் சிங்: ‘விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்’
துணிச்சலான விவசாயி தலைவரான சவுத்ரி சரண் சிங் இந்தியாவின் 6வது பிரதமராக குறுகிய காலத்திற்கு பணியாற்றினார். அவர் ஜூலை 28, 1979 இல் பிரதமராகப் பதவியேற்றார் மற்றும் 170 நாட்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"ஜனநாயகம்" மற்றும் விவசாய சமூகத்தின் நலனுக்கான அவரது "அர்ப்பணிப்பு" ஆகியவற்றை பிரதமர் மோடி பாராட்டினார். “நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார்." என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்: 'பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தெடுத்தார்'
இந்தியாவின் 10வது பிரதமராக ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை மொத்தம் 1,791 நாட்கள் பாமுலபர்ட்டி வெங்கட நரசிம்ம ராவ் பதவி வகித்தார். நாட்டை பொருளாதார சீர்திருத்தங்களின் சகாப்தத்திற்கு கொண்டு வந்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர். ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சராகப் பணியாற்றிய ராவ், 1971ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்கும் வரை சட்டம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளை வகித்தார். 1973 வரை முதல்வராக இருந்தார்.
அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நாட்டில் "பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தவர்" என்று பாராட்டினார். மேலும், "நரசிம்ம ராவ் கருவின் பிரதமராக இருந்த காலம், உலகச் சந்தைகளுக்கு இந்தியாவைத் திறந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளால் குறிக்கப்பட்டது. மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், இந்தியாவை முக்கியமான மாற்றங்களின் மூலம் வழிநடத்தியது மட்டுமல்லாமல், அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தையும் வளப்படுத்திய ஒரு அரசியல் தலைவராக அவரது பன்முக மரபை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன்: தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியது
‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் சுவாமிநாதன், 1960கள் மற்றும் 70களில் இந்தியா உணவுப் பாதுகாப்பை அடைய உதவிய விவசாயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களில் பெரும் பங்கு வகித்தார்.
இந்தியாவின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், "சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் மற்றும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தவர், அவருடைய நுண்ணறிவு மற்றும் உள்ளீடுகளுக்கு நான் எப்போதும் மதிப்பளிப்பேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.
அன்னமையில், பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான 96 வயதான எல்.கே. அத்வானி மற்றும் இரண்டு முறை பீகார் முதல்வரும் சோசலிஸ்ட் ஐகானுமான கர்பூரி தாக்கூருக்கு (மரணத்திற்குப் பின்) பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.