புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து இன்று கருப்பு கொடி ஏற்றி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி , காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணி கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.
ஆளுநர் மாளிகை அருகே சென்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுப்பு கட்டை இல்லாமல் காவல் வாகனம் மற்றும் டெம்போ ட்ராவலரை கொண்டு வழிமறித்தனர்.
அப்போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய மார்க்கெட் கட்டும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்பி கண்ணன் பங்கேற்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“