தமிழகத்தில் மாணவி பாதிக்கப்பட்டதற்கு சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, புதுச்சேரி மாணவி பாதிக்கப்பட்டதற்கும் சாட்டையால் அடித்துக் கொள்வாரா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் வெளி நபர்களால் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்டதற்கு முழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், துச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மாணவி விவகாரம் சம்பந்தமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, அண்ணாமலை தன்னைத்தானே சவுக்கால் அடித்துக் கொண்டார். புதுச்சேரியிலும் மாணவி பாதிக்கப்பட்டு இருக்கிறார். அந்த மாணவிக்காக, புதுச்சேரிக்கு வந்து, சட்டமன்றம் முன்போ அல்லது பல்கலைக்கழகம் முன்போ அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வாரா?
அப்படி இல்லை என்றால் அவருக்கு பதிலாக பா.ஜ.க தலைவர் செல்வ கணபதி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். சரவண குமார் மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சவுக்கால் அடித்துக் கொள்வார்களா? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி; புதுச்சேரிக்கு ஒரு நீதியா?
பெண்களின் வன்கொடுமை பற்றி பேச எந்தவித உரிமையும் பா.ஜ.க-விற்கு இல்லை. மக்கள் பிரச்சனைகள் எதை பற்றியும் கவலைப்படாத முதலமைச்சர் ரங்கசாமி, வசூல் வேட்டையிலும், கல்லா கட்டும் வேலையிலும் மட்டுமே ஈடுபட்டுள்ளார்.
காவல்துறை அலுவலகங்கள், கட்டப்பஞ்சாயத்து அலுவலகமாக மாறி வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் மதுபான உரிமங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார். அப்படி என்றால் 15 லட்சம் மக்கள் தொகையில் ஏழரை லட்சம் மதுபான கடைகளுக்கு அனுமதி கொடுப்பாரா?
புதுச்சேரியில் ஏற்கனவே அயல்நாட்டு மதுபானங்கள் தயாரிக்கும் ஆறு தொழிற்சாலைகள் உள்ளது. தற்போது லஞ்சம் பெற்றுக் கொண்டு மேலும் எட்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வெளிப்பட தன்மை இல்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளது.
சார்லஸ் மார்ட்டினுக்கு வாக்களித்தால் மீண்டும் புதுச்சேரியில் லாட்டரி வந்துவிடும். புதுச்சேரியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தனி தனி அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, வருகின்ற தேர்தலில் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்".