புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தினால் முதலமைச்சர் ரங்கசாமி சிறை செல்வார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு கொடுக்காமல் உள்ளனர். இலவச வேஷ்டி, சேலையும் வழங்காமல் பணமாக கொடுக்கின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியை குறை சொன்ன முதலமைச்சர் ரங்கசாமி இப்பொழுது என்ன செய்கிறார்?
மதுபான ஆலை உரிமத்தை பெற முதல்கட்ட கடிதம் 8 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் இல்லாமல், இடைக்கால அனுமதியை புதுச்சேரி அரசு மதுபான உற்பத்திக்கு அந்த கம்பெனிகளுக்கு கொடுத்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 8 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சிக்கல் உள்ளதால் அமைச்சரவைக்கு கொண்டு வந்து ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மதுபான உரிமை கொடுப்பதற்காக இந்த அரசு செய்துள்ள தில்லுமுல்லு, ஊழல் தொடர்பாக துணைநிலை ஆளுநர், சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.
முதல் கட்டமாக துணை நிலை ஆளுநரை சந்திக்க உள்ளோம். மேலும் இந்த விவகாரத்தில் ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டால் அதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளதாகதான் அர்த்தம் என்றும், சிபிஐ விசாரணை வைத்தால் முதலமைச்சர் ரங்கசாமி சிறைக்கு செல்வது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.