/indian-express-tamil/media/media_files/2025/05/24/IIKOX7xYZvaXldQ9w1SW.jpg)
ரங்கசாமியை முதலமைச்சராக்கியதும், நமச்சிவாயத்தை காங்கிரஸ் தலைவராக்கியதும் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருக்கனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
அப்போது, "புதுச்சேரி, தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தென் மாநிலங்களில் ஒரு இடத்தையாவது கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.க. புதுச்சேரியைக் குறிவைக்கும். பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றதால் காங்கிரஸ் அலட்சியமாக இருக்கக் கூடாது. சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் மிக முக்கியமானவர்கள். என்.ஆர். காங் - பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் பட்டியலை கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காங்கிரசாரின் பொறுப்பு.
ரங்கசாமியை முதலமைச்சராக்கியதும், நமச்சிவாயத்தை காங்கிரஸ் தலைவராக்கியதும் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்த இரண்டும் உலக மகா தவறு. வன்னியர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதே இருவர் வன்னியர் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கும் ஆட்சியை நடத்துகின்றனர். இந்த ஆட்சியைத் தூக்கி எறிந்து, அனைவருக்கும் பரவலாக அதிகாரம் கிடைக்க வேண்டும். அதுதான் சமதர்ம சமுதாயம்" என்று கூறினார்.
செய்தி - பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.