கிரன்பேடி - நாராயணசாமி : இரு துருவங்களை இணைத்த தமிழ்!

‘எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா? என தெரியாது? ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன்’ என்று கவர்னர் கூறினார்.

கிரண்பேடியின் ஆங்கில உரையை முதல்வர் நாராயணசாமி மொழி பெயர்த்தார். இதன் மூலமாக இரு துருவங்களை தமிழ் இணைத்து வைத்த சுவாரசியம் அரங்கேறியது.

கிரண்பேடி, இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர்! டெல்லியில் பாஜக முதல்வர் வேட்பாளராக இறங்கி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வியை தழுவிய அவருக்கு, அங்கு அரசியல் கை கூடவில்லை. ஆனால் இப்போது புதுவை துணை நிலை ஆளுனராக அவர் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவே விமர்சனங்கள் இருக்கின்றன.

கிரண்பேடிக்கும், புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான உரசல்கள் தேசம் முழுவதும் பிரபலம்! நிர்வாக விவகாரங்களில் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது தொடர்கதை! இந்தச் சூழலில்தான் இலக்கிய விழா ஒன்றில் இருவரையும் தமிழ் இணைத்து வைத்திருக்கிறது.

புதுவையில் கம்பன் கலையரங்கில் இன்று (மே 11) கம்பன் விழா தொடங்கியது. விழாவை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது, ‘எனக்கு ஆங்கிலம்தான் தெரியும். தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். தமிழில் பேசவா? ஆங்கிலத்தில் பேசவா? ஆங்கிலத்தில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும்? அவர்கள் கை தூக்குங்கள்’ என்று கேட்டார்.

இதற்கிடையே தனது ஆங்கில உரையை கல்வித்துறை அமைச்சர் மொழி பெயர்க்கலாமா? என கேள்வி எழுப்பினார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன், கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்து பேசினார். ‘கவர்னரின் ஆங்கில உரையை எனக்கு தெரிந்த ஆங்கில மொழிப்புலமையோடு மொழிபெயர்க்கிறேன். அதில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசிவிட்டு அமைச்சர் கமலக்கண்ணன் மொழி பெயர்க்க தயாரானார்.

அப்போது கவர்னர் கிரண்பேடி குறுக்கிட்டு, ‘முதல் அமைச்சர் நாராயணசாமி எனது உரையை மொழி பெயர்க்கட்டும்’ என கேட்டு கொண்டார். இதையடுத்து நாராயணசாமி மொழிபெயர்க்க முன்வந்து கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்தார். அப்போது, ‘எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா? என தெரியாது? ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன்’ என்று கவர்னர் கூறினார். அப்போது நாராயணசாமியும், ‘நானும் அந்த நிமிடங்கள் மட்டும் நம்புகிறேன்’ என்றார்.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி, ‘தற்காலிகமாக நாம் நண்பர்களாக இருக்கலாம்’ என நாராயணசாமியுடன் கை குலுக்கி விட்டு, ‘இந்த நட்பு காலம் முழுவதும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறேன்’ என மைக்கில் கூறி தனது உரையை தொடங்கினார்.

கவர்னரின் ஆங்கில உரையை முழுமையாக நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்தார். பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார். எதிரும் புதிருமான ஆளுனரையும் முதல்வரையும் இணைத்து வைத்தது தமிழ்!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close