மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்ற மாணவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஷாஜன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோருடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை புதுச்சேரி வந்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள ரெஸ்டோ பாருக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்தப் பாரில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மற்ற வாடிக்கையாளர்கள் அவர்களை வெளியே அனுப்புமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த பவுன்சர் மற்றும் ஊழியர்கள் அவர்களை பாரில் இருந்து சுமார் 12.30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் தங்களை வெளியேற்றியது குறித்து பவுன்சர் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் முத்தியால்பேட்டையை சேர்ந்த பார் ஊழியர் அசோக் ராஜ் கடும் கோபம் அடைந்துள்ளார். இதன் பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு பாரின் கீழே வந்த அவர் அங்கிருந்த சண்முக பிரியன் என்ற இளைஞரின் முதுகில் குத்தியுள்ளார். இதனை தட்டி கேட்ட ஷாஜனையும் இடுப்பில் அவர் குத்தி உள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முக பிரியன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், ஷாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொலையில் தொடர்புடையதாக அசோக் ராஜ், பவுன்சர்கள், பார் ஊழியர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றும் ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் கையூட்டாக ரூ. 40 லட்சம் பெற்று கொண்டு அதிகளவில் ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டதாக புகார் தெரிவித்தோம். ரெஸ்டோ பாரால் ஏற்பட்ட கலாச்சார சீரழிவுக்கு என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க அரசே காரணம்.கோயில், சர்ச், மசூதி, பள்ளிகள் அருகே ரெஸ்டோபார்கள் அமைக்க பல கோடி லஞ்சம் தரப்பட்டு அனுமதி பெற்று செயல்படுகின்றன. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வார விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து வெளியே வர புதுவை மக்கள் பெண்கள் அஞ்சுகின்றனர்.
தமிழக கல்லூரி மாணவர் ரெஸ்டோபாரில் கொல்லப்பட்டுள்ளார். ரெஸ்டோபார் இரவு 12 மணிக்கு மூடாமல் அதிகாலை வரை செயல்பட்டுள்ளது. அதிகாலை வரை செயல்பட போலீஸாரும், கலால்துறையும் எப்படி அனுமதி தந்தனர். அதிகாலை வரை ரெஸ்டோ பார்கள் திறப்பதற்கு போலிசார் கையூட்டு பெற்று உடந்தையாக உள்ளனர். எனவே, போலீசார் கொலை குற்றத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
கொலை நடந்த ரெஸ்டோபார் உரிமையாளர் முதல் அமைச்சருக்கு நெருக்கமானவர். அதனால் அதிகாலை நடந்த சம்பவத்துக்கு எப்ஐஆர் போட இரவு வரை போலீஸார் காலதாமதம் செய்தனர். புகார்தாரர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் போது தொடக்கத்தில் இருந்தோரிடம் புகார் பெறாமல் தாமதமாக வந்தோரிடம் புகார் பெற்று எப்ஐஆர் பதிவாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் ரங்கசாமி ராஜிநாமா செய்ய வேண்டும்.
ஆட்சியாளர்களின் பினாமிகள் பலர் தான் ரெஸ்டோபார்கள் நடத்துகின்றனர்.போலீஸார் இந்த வழக்கை சரியாக விசாரிக்க மாட்டார்கள். அவர்கள் மீது நம்பிக்கையில்லை. அதனால் சிபிஐ விசாரிக்கவேண்டும். அதனால் சென்னை ஐகோர்ட்டு சென்று விசாரணைக்காக மனு தாக்கல் செய்வோம்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோவில், மசூதி, சர்ச், பள்ளி அருகேயுள்ள ரெஸ்டோபார் அனுமதிகளை ரத்து செய்வோம்.
புதுச்சேரியில் நாங்கள் செய்த பணிகளை ஒரே மேடையில் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். எங்கள் அரசின் திட்டங்களைதான் அவர்கள் செய்ல்படுத்தியுள்ளனர். எங்களை பணி செய்ய விடாமல் அப்போதைய கவர்னர் கிரண்பேடி மூலம் முடக்கினர். பல வேலை வாய்ப், ரேஷன் அரிசி, முதியோர் ஓய்வூதியம் கோப்பு என அனைத்தையும் முடக்கினார். அரசு பணியில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்ததாக ரங்கசாமி நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். அதேபோல் பணி தராததை நான் நிரூபித்தால் ரங்கசாமி முதல அமைச்சர் பதவியில் இருந்து விலகுவாரா? எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.