Narcotic jihad row : கேரளத்தில் மத நல்லிணக்கத்தை பரப்பும் வகையில் கேரள காங்கிரஸ், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மத தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக கேரள காங்கிரஸ் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் கத்தோலிக்க பாதிரியார் போதைப்பொருள் ஜிகாத் என்று கூறிய கருத்துகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன், மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீஸன் ஆகியோர் இஸ்லாமிய மதத்தலைவர்களுடன் தங்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். அண்மையில் பாலா பிஷப் ஜோசப் கல்லரங்கட் கூறிய கருத்துகள் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று முஸ்லிம் மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அவர்கள்.
சமஸ்தா கேரளா ஜெம்இய்யதுல் உலமா தலைவர் சையத் முஹம்மது ஜிஃப்ரி முத்துக்கோயா தங்கல் மற்றும் கந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுதாகரன், மாநில அரசு பொறுப்பை ஏற்கத் தவறியதால் கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
எங்கள் சமூகத்தில் யாரும் வெறுப்பைப் பரப்ப விரும்பவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று கூடி விவாதிக்கவும் உரையாற்றவும் விரும்புகிறோம். மத நல்லிணக்க செய்தியை பரப்புவதற்காக அனைத்து மதத் தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் நடத்தும் என்று கூறினார் அவர்.
சில இணைய ஊடகங்களில் மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சதீஷன் கேட்டுக் கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தங்கல், மாநிலத்தில் இருக்கும் அனைத்து சமூகங்களுடன் இணைந்து நிற்பது இடதுசாரி அரசின் பொறுப்பாகும். பாதிரியார் ஒருவரிடம் இருந்து இது போன்ற கருத்துகள் வருகிறது என்றால், அரசாங்க நிலைப்பாடு நியாயப்படுத்தும் விதத்தில் இருக்கக்கூடாது. அரசாங்கம் அனைத்து சமூகங்களுக்காகவும் நிற்க வேண்டும். இது அரசின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார். லவ் ஜிகாத் என்று இருந்தாலும் அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அழைப்புவிடுத்த கூட்டத்தில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பிய போது, முஸலியார், பாதிரியாரின் கருத்து மிகவும் தவறானது. அவர் அதனை உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.
செப்டம்பர் மாதம் 9ம் தேதி அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாதிரியார், கிருத்துவ பெண்கள் கேரளாவில் லவ் மற்றும் நார்கோடிக் ஜிகாத்திற்கு இரையாகி வருகின்றனர். ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத இடங்களில் தீவிரவாதிகள் அந்த மாநில இளைஞர்களை அழிக்க இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஒருவர் எந்த ஒரு மதத்தினரையும் குறிப்பிட்டு குறை கூற முடியாது என்று மூத்த பாஜக தலைவர் சி.கே. பதம்நாபன் தெரிவித்தார்.
மூத்த கிறிஸ்தவ பாதிரியார் எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சமூகத்தில் பிரச்சனையை உருவாக்கும் தீவிரவாத கூறுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியதால் பத்மநாபனின் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
பாதிரியாரின் கருத்துகளுக்கு பிறகு ஏற்பட்ட பதட்டமான சூழலை தணிக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுதாகரன் மற்றும் வி.டி. சதீஷன் ஆகியோர் மூத்த பாதிரியார்கள் மற்றும் இஸ்லாமிய மத குருக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil