"நாடாளுமன்ற சபைக்குள் பல (பாஜக) எம்.பி.க்கள் இல்லாததற்கு" வலுவான விதிவிலக்கு அளித்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை தனது கட்சித் தலைவர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்தால் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட "மாற்றங்கள்" ஏற்படும் என்று எச்சரித்தார்.
இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் முதன்முறையாக தனது கட்சி எம்.பி.க்களிடம் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி., ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துக் கொள்வது குறித்து பலமுறை எங்களிடம் கூறியதை அவர் (பிரதமர் மோடி) எங்களுக்கு நினைவூட்டினார். மேலும், எம்.பி.க்களிடம் குழந்தைகளிடம் சொல்வதைப் போல் சொல்வது அழகல்ல என்றார். அப்போது பிரதமர், நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் உரிய நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி, கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில், தனது கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்டில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
மேலும் "நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பாராளுமன்றத்திற்கு, வருகை தருவதில் கட்சி தீவிரமாக இருக்கும் என்பதை எங்களில் சிலர் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறோம்," என்றும் அந்த எம்.பி கூறினார்.
பிரதமர் மோடியின் உரைக்கு முன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கடந்த வாரத்தில் நடந்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விளக்கி, சில சமயங்களில் வருகை பிரச்சினையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வட்டாரங்களின்படி, சபையில் போதிய எண்ணிக்கை இல்லாததால், எம்.பி.க்களை இரண்டு முறையாவது அழைக்க வேண்டியுள்ளது என்று ஜோஷி கூறினார்.
பாஜகவுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் இருந்து 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோடியின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ள லோக்சபா சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கடும் அமளியால் மாநிலங்களவை பலமுறை திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள காசி விஸ்வநாத் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்பதற்குப் பதிலாக, பாஜக எம்பிக்கள் அவைக்கு வருமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். வாரணாசியில் நடைபெறும் விழாவில், நடைபாதையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
கூட்டத்தில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்க பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். “பத்ம விருது நல்ல பணி செய்யும் சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விருது பெற்றவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் கூறியுள்ளார்,” என்று ஜோஷி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil