/indian-express-tamil/media/media_files/2025/08/16/narendra-modi-independence-day-2025-08-16-09-37-25.jpg)
Narendra Modi Independence day speech
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, “மக்கள் தொகையின் மாற்றங்கள்” குறித்து ஆய்வு செய்ய “மக்கள் தொகை ஆய்வு இயக்கம்” (Demographic Mission) ஒன்றை அமைக்கவிருப்பதாக அவர் அறிவித்தது, பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் நீண்ட நாள் கவலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
செங்கோட்டையில் இருந்து பேசிய மோடி, “மக்கள் தொகை மாற்றங்கள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் ஏற்படும் போது, அது நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு நெருக்கடியை உருவாக்குகிறது. ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு சவாலாக அமைகிறது. எனவே, ஒரு உயர்மட்ட மக்கள் தொகை இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். இது திட்டமிட்ட, உறுதியான வழியில் அதன் பணியை மேற்கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பின் பின்னணியில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பழைய நிலைப்பாடுகள் உள்ளன. பல ஆண்டுகளாக, அண்டை நாடுகளில் இருந்து வரும் ஊடுருவல், மதமாற்றம் மற்றும் வெவ்வேறு சமூகங்களிடையே உள்ள பிறப்பு விகித வேறுபாடுகள் போன்றவற்றை, தேசப் பாதுகாப்பு, அரசியல் மற்றும் சமூக-பண்பாட்டு சவால்களாக அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: எல்லை மாநிலங்கள் கவனம்
ஆகஸ்ட் 18, 2022 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாட்டில் பேசும்போது, “எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை மாற்றங்கள்” குறித்து கண்காணிக்க வேண்டும் என்று எல்லை மாநிலங்களின் காவல்துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்த நேரத்தில், ஷாவின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றது.
வங்கதேச குடியேறிகளை “கறையான்கள்” என்று 2018-ல் விமர்சித்த அமித் ஷா, “அவர்கள் ஏழைகளுக்கான உணவு தானியங்களை உண்கிறார்கள், நமது வேலைகளை பறிக்கிறார்கள். அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று பேசினார். அசாமில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை மற்ற மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் பார்வையில் ‘சமநிலையற்ற மக்கள் தொகை’
ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு, இந்த விவகாரம் ஒரு நாகரிக சவாலாகவே பார்க்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு விஜயதசமி உரையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “மக்கள் தொகை சமநிலையற்ற தன்மை” காரணமாகவே கிழக்கு திமோர், தென் சூடான், கொசோவோ போன்ற புதிய நாடுகள் உருவாகின என்று கூறினார். 1947-ல் இந்தியாவின் பிரிவினை மற்றும் 1971-ல் வங்கதேசம் உருவானதையும் இதற்கு உதாரணமாகக் காட்டினார்.
“பிறப்பு விகிதம் ஒரு பகுதி மட்டுமே. கட்டாய மதமாற்றம் மற்றும் ஊடுருவல் ஆகியவை மிகப்பெரிய காரணிகள்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய, விரிவான “மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை” கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தென்னிந்தியாவின் கவலைகள்: நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
மறுபுறம், மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாகக் கடைப்பிடித்த தென்னிந்திய மாநிலங்களில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்கப்படும்போது, குறைவான பிறப்பு விகிதம் காரணமாக தங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஜூலை மாதம், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த கவலைகளை வெளிப்படுத்தினர். தங்கள் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்களைப் பாதுகாக்க, "16 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும்" என ஸ்டாலின் வேடிக்கையாகக் கூறியது, ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசிய “அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கருத்தை வேறு சூழலில் எதிரொலித்தது.
கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கை
இந்த கவலைகளுக்கு தீர்வாக, சில பாஜக ஆளும் மாநிலங்கள் கொள்கைகளை வகுத்துள்ளன. அசாத்தில் 2017-ல் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகைக் கொள்கையின்படி, இரண்டு குழந்தைகளுக்கும் மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலைகள் மறுக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில், இரண்டு குழந்தைகளுக்கும் மேல் உள்ள குடும்பங்களுக்கு அரசு மானியங்கள் மறுக்கப்படும் சட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எண்ணிக்கையா, அரசியல் காரணங்களா?
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கூற்றுகளில், மக்கள் தொகை மாற்றம் என்பது வெறும் எண்ணிக்கை சார்ந்ததாக இல்லாமல், அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து வரும் சட்டவிரோத குடியேற்றங்கள் வாக்காளர் பட்டியல்கள், வள ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத பதற்றங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. மதமாற்றங்களும், ஊடுருவல்களும் சமூக சமநிலையை மாற்றி, அரசியல் வரைபடத்தை மாற்றக்கூடும் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது.
மோடி அறிவித்துள்ள இந்த “மக்கள் தொகை ஆய்வு இயக்கம்”, இந்த மாற்றங்களை முறைப்படி ஆய்வு செய்து கண்காணிக்க ஒரு நிறுவன அமைப்பை உருவாக்கும். இந்த இயக்கம் வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் ஆய்வு செய்யுமா அல்லது கொள்கை பரிந்துரைகளை வழங்குமா என்பதைப் பொறுத்தே, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தக் கவலைகள் எந்த அளவுக்கு நிர்வாக நடவடிக்கைகளாக மாறப்போகின்றன என்பது தெரியவரும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.