இந்த ஆண்டு ஒன்பது மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக, பாஜக தனது வரம்பை விரிவுபடுத்துவதற்கான வியூகத்தைத் தயாரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமையன்று, தேர்தல் பரிசீலனைகள் இல்லாமல், விளிம்புநிலை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அணுகுமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி ஆற்றிய உரையில், வாக்குகளை எதிர்பார்க்காமல், பாஸ்மாண்டா, போராஸ், முஸ்லீம் தொழில் வல்லுநர்கள் மற்றும் படித்த முஸ்லிம்களை அணுகுமாறு, கட்சித் தொண்டர்களை மோடி கேட்டுக் கொண்டார்.
முக்கியமாக இந்த சமூகத்தினரிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டது என்று கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு வட்டாரம் தெரிவித்தது.
வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட இரண்டு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிந்தது.
மோடியின் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நாம் உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும் என்று பிரதமர் கூறினார். அவ்வாறு செய்யும்போது, வாக்குகளைப் பற்றி மட்டும் நாம் சிந்திக்கத் தேவையில்லை என்றார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
கடந்த ஜூலை மாதம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுவில் அவர் ஆற்றிய உரையில், பாஸ்மாண்டா முஸ்லிம் போன்ற சிறுபான்மையினரிடையே ஓரங்கட்டப்பட்டவர்களைச் சென்றடையவும், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளைக் கண்டறியவும் மோடி வலியுறுத்தினார்.
மத்திய அரசின் திட்டங்கள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்காக பாஜக பின்னர் ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
பாஸ்மாண்டா முஸ்லீம்களுக்கான கட்சியின் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து கேட்டதற்கு, ஒதுக்கப்பட்டவர்களை பிரதானப்படுத்தும் வரை நம் வளர்ச்சிப் பயணம் நிறைவடையாது என்று பிரதமர் கூறியதாக ஃபட்னாவிஸ் தெரிவித்தார். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைவது குறித்து பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது, எனவே இந்த நேரத்தை நாம் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் பாஜக இனி ஒரு அரசியல் இயக்கம் அல்ல என்றும், அது ஒரு சமூக இயக்கம் என்றும், சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றியமைக்க பாடுபடுகிறது என்றும் கட்சித் தலைவர்களிடம் மோடி கூறினார்.
அவரது உரை ஊக்கமளிப்பதாக இருந்தது, அது வழிகாட்டுதலைக் கொடுத்தது மற்றும் எதிர்காலத்திற்கான வழியையும் பார்வையையும் காட்டியது. இந்தியாவுக்குச் சிறந்த சகாப்தம் வரப்போகிறது என்றும், நம்மால் முடிந்தவரை கடினமாக உழைக்கத் தயங்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இந்த பொற்காலத்திற்கு நாம் சாட்சியாக இருக்கவும், 2047 வரையிலான 25 ஆண்டு காலத்தை ’கடமைகளின் சகாப்தமாக’ மாற்றவும் முடியும். இது ஒரு, சாதரண அரசியல்வாதியின் உரையைப் போல அல்ல, ஒரு முதிர்ந்த அரசியல் மேதையின் பேச்சு போல இருந்தது என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
எந்தவொரு "அதீத நம்பிக்கை"க்கும் எதிராக கட்சியை மோடி எச்சரித்ததாகவும், 1998 ஆம் ஆண்டில் திக்விஜய சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் செல்வாக்கின்மை இருந்தபோதிலும், 1998 இல் மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி தோல்வியடைந்ததற்கு ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டினார் என்றும் ஆதாரங்கள் கூறுகின்றன. மோடி அப்போது மாநிலத்தில் பாஜகவின் அமைப்பு விவகாரங்களில் முக்கிய ஆலோசகராக இருந்தார்.
மோடி தனது உரையில், 18-25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தியாவின் அரசியல் வரலாற்றைக் காணவில்லை என்றும், முந்தைய அரசாங்கங்களில் நடந்த “ஊழல் மற்றும் தவறான செயல்கள்” பற்றி அவர்களுக்குத் தெரியாது என்றும் கூறினார். “எனவே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பா.ஜ.க.வின் நல்லாட்சி பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று கட்சியினரிடம் கூறினார்.
குறிப்பாக எல்லையோர கிராமங்களில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அவர்களை சென்றடைவதை உறுதி செய்யவும் மோடி அறிவுறுத்தியதாக ஃபட்னாவிஸ் கூறினார்.
பிரதமரின் பேச்சு உத்வேகம் அளித்தது. அது எங்களுக்கு வழிகாட்டியதுடன், ஒரு புதிய வரைபடத்தையும் காட்டியது. நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமிர்த காலத்தை, கடமை காலமாக மாற்றினால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பிய மோடி, 'தர்த்தி பச்சாவோ' பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு கட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது. "ஒருமித்த" முடிவை அறிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நட்டா "பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சியான தலைமையை பாஜகவுக்கு ஒரு ஆணையாக மாற்றியுள்ளார் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“