பாஜக கூட்டணியில் புதிய நண்பர்களை இணைப்போம்: அமித்ஷா பிரத்யேக பேட்டி

இதுவரை பாஜக செய்த சாதனைகளை பட்டியலிடும் அமித் ஷா

மக்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய இருக்கிறது. அவை அனைத்தையும் நரேந்திர மோடி 2019ல் செய்வார் – என்று இன்றைய பேட்டியை தொடங்கினார் பாஜக தலைவர் அமித்ஷா.

பாஜக ஒரு போதும் மதத்தினை வைத்து அரசியல் ஆதாயம் தேடாது. எங்கள் கட்சியில் இருந்து மதக்கலவரங்களை தூண்டும் வகையில் ஒரு போதும் யாரும் பிரச்சனைகளை எழுப்பமாட்டார்கள் என்றும் பெருமிதமாக கூறுகிறார் அமித்ஷா.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக பேட்டியளித்த அமித்ஷா, வன்முறை தாக்குதல்கள், பசு பாதுகாப்பு சம்பவங்களினால் நிகழும் வன்முறைகள் என பாஜக மற்றும், இன்றைய அரசியல் சூழ்நிலைகளை பாதிக்கும் அனைத்து காரணிகள் பற்றியும் பேசினார்.

பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிடும் அமித்ஷா

பாஜக தலைமை, நாட்டிலுள்ள அனைத்து தொகுதிகளையும் பார்வையிட்டு அவர்களின் நிறை குறைகளை களைய நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளோம்.

அதனால் சென்ற முறையை விட இம்முறை மோடி அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறினார். மேலும், இந்த நான்கு வருட ஆட்சியில் 19 மாநிலங்களில் உள்ள சுமார் 22 கோடி மக்களுக்கு நல்ல வாழ்க்கையினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 7.5 கோடி வீடுகளுக்கு கழிப்பிடங்களை கட்டிக் கொடுத்துள்ளோம். 19,000 கிராமங்களுக்கு மின்வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

12 கோடி குடிமக்கள் முத்ரா கடன்வசதி மூலம் நன்மை அடைந்துள்ளனர். 18 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 19 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.

சாலைகள் மற்றும் இரயில் பாதைகள் ஆகியவற்றை சீராக்கிக் கொடுத்துள்ளோம். 2019ல் இதை விடவும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கலாம் என்று கூறினார் அமித்ஷா.

ஜம்மு – காஷ்மீர் பிரச்சனைப் பற்றி

காஷ்மீர் மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாங்கள் செய்ய விரும்புகிறோம். இதுவரை நடந்த மோசமான வரலாற்றினை நாங்கள் மாற்றி எழுத முயல்கிறோம். ஆனால் எங்களின் ஆட்சி மதக் கலவரங்களை தூண்டும் வகையில் நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டினை எங்கள் மீது வைக்கிறார்கள்.

எந்த ஒரு அரசுமே, மிகவும் பின்தங்கியிருக்கும் மாநிலத்தின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டே செயல்படும். தற்போது ஜம்மு காஷ்மீர் அல்லது லடாக் பகுதியில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் அது எங்களின் திட்டங்கள் மூலமாகவே தான் நடைபெறுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

To read this Article in English 

கூட்டணி பற்றி

கூட்டணி ஆட்சியில் நாங்கள் சரிவர இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் அக்கருத்து முற்றிலும் தவறானது. தெலுங்கு தேசம் கட்சி தானாகவே கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் அதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் சிவ சேனா எங்களின் கட்சிக்கு இன்னும் ஆதரவினை அளித்துக் கொண்டிருக்கிறது. சிவ சேனா பற்றி நேரிடையாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு கருத்தினையும் அமித் ஷா பதிவு செய்யவில்லை.

புதிய கூட்டணிகள் உருவாகுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமித், கூட்டணிகளில் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே தான் இருக்கும். அதனால் அதைப்பற்றி வருத்தப்பட ஒன்றும் இல்லை. எங்களின் கட்சி புதிய நண்பர்களை அணைத்துக் கொள்ளும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கூட்டணியை உருவாக்கிவிட்டால், மக்கள் யார் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது எளிதில் தெரிந்து விடும் என்று குறிப்பிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close