பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாய்க்கட்டு போட்டிருக்கிறார். மீடியாவில் சமூக விஞ்ஞானிகள் போல உளறிக் கொட்டவேண்டாம் என கேட்டுக் கொண்டார் அவர்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. நிர்வாகிகள் செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாஜக.வினர் இது போன்ற விஷயங்களில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அக்கட்சியின் தலைமைக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளன. பாலியல் பலாத்கார விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என ஏற்கனவே பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்கர் பேசுகையில், ‘இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நடக்கும் ஒன்று, இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களை பெரிதாக்க கூடாது’ என்றார்.
பாஜக நிர்வாகிகளின் வரம்பு மீறிய பேச்சுக்களால் அக்கட்சியின் தலைக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது.
இந்நிலையில் பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
நமோ ‘ஆப்’ வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பாஜக எம்.பிக்களிடம் உரையாற்றுகையில் பிரதமர் மோடி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
‘நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. மீடியா கேமராக்கள் முன்னதாக பேசும்போது, நாம் சிறந்த சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நினைத்துக்கொண்டு வார்த்தைகளை பிரயோகம் செய்கிறோம். அது நம்மை சிக்க வைக்கிறது, நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது.
தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும் இது நடக்கிறது. இதை பற்றிய கொஞ்சமும் கவலைப்படாமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். நீங்கள் அள்ளித் தெளிக்கும் மசலா கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.
எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும்.’ இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி.