New Narendra Modi Government:லோக்சபா தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று ( மே 25ம் தேதி) நரேந்திர மோடியை தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளனர். அதன்பின்னர், அவர் தலைமையில், ஜனாதிபதியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியாக, 16வது லோக்சபாவை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதனையடுத்து, பிரதமர் மோடி, தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வழங்கினார். அவரது ராஜினாமாவும் உடனடியாக ஏற்கப்பட்டது.
பார்லிமென்ட் வளாகத்தின் மத்திய அரங்கில், இன்று ( மே 25ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் புதிய எம்.பி.க்களிடையே, மோடி உரையாற்ற உள்ளார். அக்கூட்டத்தில், பிரதமராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். மோடி, அடுத்த வாரம், பிரதமராக பதவியேற்பார் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
542 தொகுதிகளுக்கு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், கடந்த 30 ஆண்டுகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிக்கட்சி என்ற சாதனையை, பாரதிய ஜனதா கட்சி நிகழ்த்தியுள்ளது. கடந்த 2014 தேர்தலில், பா.ஜ. 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது.
ராஷ்டிரபதி பவனில், வரும் 30ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்வார் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை வெற்றிவாகை சூடச்செய்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, மோடி விரைவில் வாரணாசி செல்ல உள்ளார். வாரணாசி தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலினி யாதவை, மோடி 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.