புது டெல்லியில் உள்ள ரகப் கன்ஜ் சாஹிப் (RAKAB GANJ SAHID) குருதுவாராவிற்கு இன்று காலை சென்று குரு தேஜ் பகதூர் துவாராவில் பிரதமர் வழிபாடு நடத்தினார்.
முன்னதாக, நேற்று பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “குரு தேக் பகதூர் அவர்களின் வாழ்க்கை, தைரியம் மற்றும் இரக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அவரது நினைவு தினத்தன்று குரு தேக் பகதூர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய நேர்மையான சமூகம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்கிறேன்” என்று கூறினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவாசாயிகள் கடுமையான போராட்டம் நடத்தி வரும் சூழலில் புது டெல்லியில் உள்ள ரகப் கன்ஜ் சாஹிப் என்ற பிரபல குருதுவாராவில் பிரதமர் வழிபாடு நடத்தினர்.மோடியின் இந்த வருகையின் போது, காவல்துறை பந்தோபாஸ்ட் மற்றும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ள மோடி, " வரலாற்று சிறப்புமிக்க ரகப் கன்ஜ் சாஹிப் குருதுவாராவுக்கு சென்று அங்குள்ள குரு தேஜ்பகதூர் சமாதியான இடத்தில் வழிபாடு நடத்தினேன். அன்னாரது 400-வது பிறந்த ஆண்டு அடுத்த ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி வரலாற்று சிறப்புமிக்க அளவில் குரு தேஜ்பகதூரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து 24-வது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
முன்னதாக, டெல்லி விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பங்கேற்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளிடம் கலந்துரையாட தமிழக பாஜக முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஒருமாத காலம் வேல் யாத்திரையை வெற்றிகரமாக முடித்த பாஜக, அடுத்ததாக மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து டெல்டா விவசாயிகளிடம் கலந்துரையாடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையிலான பாஜகவினர் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்த தொடங்கினர்.