நாசிக்கில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக ஒருவரை அடித்துக் கொலை செய்ததோடு, மற்றொருவரை கொடூரமாக தாக்கியதற்காக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம், இகத்புரி அருகே பசு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக இரண்டு பேரை இரும்பு கம்பிகள் மற்றும் மரக் கட்டையால் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையைச் சேர்ந்த 32 வயது இளைஞரைக் கொன்றதாக 11 பேர்களை ஞாயிற்றுக்கிழமை கோட்டி போலீசார் கைது செய்தனர். நாசிக்கில் உள்ள இகத்புரி அருகே மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் அவரது சக பயணியை கொடூரமாக தாக்கினர்.
காவல்துறை கூறியபடி, அஃபான் அப்துல் மஜித் அன்சாரி மற்றும் நசீர் ஷேக் என அடையாளம் காணப்பட்ட இருவர் - அகமதுநகரில் இருந்து மும்பைக்கு இறைச்சியைக் கொண்டு சென்றபோது சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது - பசு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு இரும்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் இருவரையும் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாசிக் கிராமப்புற காவல்துறை கண்காணிப்பாளர் ஷாஜி உமாப் கூறுகையில், “சின்னாருக்கு அருகிலுள்ள ஒரு சுங்கச்சாவடியின் ஊழியர் இருவரும் தங்கள் காரில் இறைச்சி எடுத்துச் செல்வதை முதலில் பார்த்துள்ளார். பின்னர் அந்த ஊழியர், அங்கிருந்த பசு பாதுகாப்பு க் குழுவைச் சேர்ந்த ஒருவருக்குத் தகவல் கொடுத்தார்.
பசு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த மேலும் மூன்று பேர், இருவரையும் ஒரு கார் மற்றும் பைக்கில் பின்தொடர்ந்தனர். பின்னர் அவர்கள் அவர்களின் வாகனத்தை வழிமறித்து அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.
படுகாயம் அடைந்த இருவரின் உடல்களும் அவர்களது வாகனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், ஒரு போலீஸார் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையின் போது அன்சாரி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்” என்று ஒரு புலனாய்வு போலீசார் கூறினார்.
ஷேக் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை, கொலை முயற்சி மற்றும் கலவரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சந்தேகத்திற்குரிய 11 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். “சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப உதவிகளின் உதவியுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். பின்னர், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்” என்று எஸ்.பி கூறினார். கைப்பற்றப்பட்ட இறைச்சி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"