புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது
புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதால் பட்டய மற்றும் முதுநிலை பட்டய படிப்புகள் புதுச்சேரியிலேயே நடைபெறும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
Advertisment
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழா மிக எளிமையாக நடந்தது.
விழாவில், துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் மத்திய உள்துறைச் செயலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, கல்வித்துறை இயக்குநர் ருத்ர கௌடு ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் பேசியதாவது, புதுச்சேரி மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும. அதனால் இளைஞர்கள் பயனடைவார்கள். தேர்ந்த வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பட்டய மற்றும் முதுநிலை பட்டய படிப்புகள் இங்கு நடைபெறும். புதுச்சேரி அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம். அதிக திறன் கொண்ட இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். நாட்டின பாதுகாப்பில் பங்கெடுத்துக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக, பாரதப் பிரதமர் அவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil