நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் கைமாற்றப்பட்ட விவகாரத்தில் பண மோசடி மற்றும் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சாமி, 2013இல் நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், “நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 1936இல் தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகை 2008ஆம் ஆண்டு நஷ்டம் காரணமாக நிறுத்தப்பட்டது.
முன்னதாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் தரப்பில் ரூ.90.25 கோடி வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டது.
அடுத்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியீட்டாளரான அசோசியேட் ஜெர்னலுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றினர்.
இந்த நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.1000 ஆயிரம் கோடி ஆகும். இதில் மிகப்பெரிய அளவில் பணமோசடி நடந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் வழக்கில் நேரடியாக ஆஜராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தனித்தனியே ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சோனியா காந்தியிடம் விசாரணை முடிந்தவுடன், டெல்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமையகம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஆக.2) சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனை நடவடிக்கைக்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், “இது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை.
மோடி அரசுக்கு எதிராக பேசும் நபர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்தப் பழிவாங்கும் அரசியலுக்கு கடும் கண்டனங்கள். மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.