புது டெல்லியில் உள்ள காங்கிரஸுக்குச் சொந்தமான ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியன் வளாகத்தை, அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் முன் அனுமதியின்றி திறக்கக் கூடாது என அமலாக்கத்துறை இயக்குநரகம் புதன்கிழமை சீல் வைத்தது.
ஜன்பத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டிற்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த விஷயத்தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே போலீசார் நிறுத்தப்பட்டு தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) தலைமை அலுவலகம் மற்றும் பிற பகுதிகளுக்கு வெளியே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் போராட்டம் நடத்ப்படலாம் என்று சிறப்புப் பிரிவிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தடுப்புகளை அமைத்துள்ளோம்” என்று வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள ஹெரால்டு மாளிகையில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். ஹெரால்டு ஹவுஸ் என்பது நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் வெளியீட்டாளரான அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியாகும். இது நேரு குடும்பத்துடன் தொடர்புடைய யங் இந்தியன் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது குறித்து விசாரணையில் உள்ளது.
அமலக்கத்துறை இயக்குநரகத்தின் சமீபத்திய நடவடிக்கைக்குப் பிறகு புதன்கிழமை, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இது மக்களை பயமுறுத்தும் தந்திரம் என்று குறிப்பிட்டார். “இது மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு தந்திரம். ஆனால், மக்கள் பயப்பட மாட்டார்கள். அவர்கள் புரட்சியில் எழுவார்கள்” என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
அதே நாளில், எதிர்க்கட்சிகளை அழிக்க மத்திய அரசின் கைகளில் அமலாக்கத்துறை இயக்குநரக ஒரு கருவியாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், அமலாக்கத்துறையை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”