கடந்த வாரம் புல்வாமாவில் நடந்த தாக்குதலை அடுத்து, நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் போர் தாக்குதல் நடத்தியது இந்தியா. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த, முயற்சி செய்ததால், இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். தெரிந்த தகவல்களை மட்டுமே கூற இருக்கிறேன். ஆகையால் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டாமென கேட்டுக் கொண்டு பேசிய அவர், “புல்வாமாவில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக, நேற்று காலை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவின் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறையின் உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் வந்ததால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தர, பாகிஸ்தான் இன்று காலை முயற்சித்து வெற்றிகரமான தோல்வியை தழுவியது. நம்முடைய விமானப்படை அதிக விழிப்புணர்வுடன் இருந்ததால், பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததை நம்முடைய தரைப்படையினர் பார்த்துள்ளனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம்முடைய இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டது. விமானி ஒருவரும் திரும்பி வரவில்லை. அந்த விமானியை பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்திருப்பதாக அந்நாடு தெரிவிக்கிறது. அது குறித்து விரைவில் விசாரிக்கப்படும்” என்றார்.