parliament farmers protest updates : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில், கடந்த 26-ந் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில், விவசாயிகள் மீதான நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பது போல் வன்முறை வெடித்தது. இதனால் டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த இரு அவைகளிலும் தனது உரையை தொடங்கினார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்கட்சிககள் ஜனாதிபதி உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் இந்த பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்த விவசாயிகள், மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச தொடங்கும்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து பெரும் சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று மாலை காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் தொடங்கப்பட்டபோது வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் வரை அவையை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்கட்சியின்ர் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்ட்ம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து உள்துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதால்,வேறு வழியில்லாமல், போலீசார் துப்பாக்கிச்சூடு கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேலும் அமளி நிலவியதால், மக்களவை தலைவர், கேள்வி நேரத்தை ரத்து செய்து வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க கூடுதலான (15 மணி நேரம்) ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை எதிர்கட்சிககள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் டிராக்டர் பேரணியில் மாயமானவர்களை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்க வேண்டும் என்றும், பேரணியில் வன்முறை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்த ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில்குமார் குப்தா ஆகியோர் அவைத்தலைவர் எச்சரிக்கையை மீறி நடந்து கொண்டதால், இன்று ஒருநாள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், 'மூன்று வேளாண் சட்டங்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதை அவர்களுக்கு (எதிர்கட்சிகளுக்கு) நினைவூட்டுகிறேன்.' இந்த மூன்று முக்கியமான வேளாண் சட்டங்களின் நன்மைகள் 10 கோடிக்கும் அதிகமான மக்களையும் சிறு விவசாயிகளையும் சென்றடையத் தொடங்கியுள்ளது. இந்த சட்டத்தில், விவசாயிகளின் உரிமைகள் மற்றும் வசதிகளில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு அரசாங்கம் புதிய உரிமைகளை வழங்கியுள்ளது என பாகஜ உறுப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக உறுப்பினர் புவனேஸ்வர் கலிதா கூறுகையில், புதிய விவசாய சட்டங்கள் பாராளுமன்றத்தில் விரிவான ஆலோசனைக்கு பின் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும், தெரிவித்த அவர், விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கட்சிகள் மற்றொரு ஷாஹீன் பாக் ஆக மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினார். பாஜக அரசாங்கம் விவசாயிகளை மதிக்கிறது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வேளாண் சட்டங்கள் தொடர்பான விவிவாதத்தில் அமளி நீடித்ததால், இரவு 7 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.