ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Naveen Patnaik aide V K Pandian quits politics after BJD debacle in Odisha
பி.ஜே.டி-யின் தோல்விக்குப் பிறகு பாண்டியன் பொது வெளியில் வருவதில் இருந்து தவிர்த்து வந்தார். அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க ஜூன் 5 அன்று முதல்வருடன் ராஜ்பவனுக்குச் செல்லவில்லை அல்லது நவீன் நிவாஸில் பட்நாயக்குடன் பி.ஜே.டி தலைவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. எனக்கு எதிரான பரப்புரை பிஜு ஜனதா தளத்தின் வெற்றியை பாதித்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிறந்த 2000 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே பாண்டியன் 2011-ம் ஆண்டு முதல் நவீன் பட்நாயக்கின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் நவம்பர் 27 அன்று பி.ஜே.டி-யில் சேர்ந்தார். அவர் எந்தப் பதவியையும் வகிக்காவிட்டாலும், பட்நாயக்கிற்குப் பிறகு கட்சியில் இரண்டாவது சக்திவாய்ந்த நபராகக் கருதப்பட்டார். 2024 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்து இருந்தார்.
147 உறுப்பினர்களை கொண்ட ஒடிசாவில் 78 இடங்களை கைப்பற்றி பி.ஜே.டி-யின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சி.பி.ஐ (எம்) ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் பி.ஜே.டி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், பா.ஜ.க 20 இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“