நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு : இமாச்சல் பிரதேசத்தில் சனிக்கிழமையன்று (13/10/2018) எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் படைப்புகளை கொண்டாடும் வகையில் ஒரு இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
கசாலி நகரில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தமிழகத்தில் வாழ முடியாது - நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சை பேச்சு
அப்போது அங்கு பேசிய அவர் “தமிழ் நாட்டில் வாழ்வதை விட என்னால் பாகிஸ்தானில் வாழ்ந்து விட இயலும். மேலும் எனக்கு அந்த மாநிலத்தின் மொழியும், உணவும் அவ்வளவு பரீட்சயம் இல்லை. ஆனால் பாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழலாம். அங்கு பஞ்சாபி மொழி பேசுவதில் எந்த தடங்கலும் இருக்காது.
கலாச்சாரப் பின்னணியில் இருந்து பார்த்தால் பஞ்சாப் தமிழ்நாட்டை விட பாகிஸ்தானுடன் அதிகம் ஒத்துப் போகிறது” என்று சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிடம் இருந்தும் எதிர்ப்பும் கண்டனங்களும் பதியப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் அமைச்சராகி விடுங்கள் - பாஜக அறிவுரை
இந்நிலையில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குறிப்பிடுகையில் ”நவ்ஜோத் சிங் சித்து, யோசிக்காமல் பாகிஸ்தான் அரசின் அமைச்சரவையில் இணைந்து விடுங்கள். பாகிஸ்தானின் மீதான உங்களின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தயவு செய்து நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சராவதற்குண்டான ஆலோசனைகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மேற்கொள்வது நலம்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானின் பிரதம அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் சித்து கலந்து கொண்டதும், பாகிஸ்தானின் ராணுவ தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவை கட்டித் தழுவிய சம்பவங்களும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இவர் இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.