நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தியை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை இன்று கைது செய்தது. வழக்கு தொடர்பாக ரியா உள்ளிட்ட பத்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ரியா சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங்-ன் முன்னாள் சமையல்காரர் தீபேஷ் சாவந்த், வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
"ரியா கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் உரிய செயல்முறையும் முடிவடைந்துள்ளது" என்று என்சிபி துணை இயக்குநர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா கூறினார். வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ரியா கைது செய்யப்பட்டுள்ளதாக என்சிபி தெரிவித்துள்ளது.
'நீதியின் பரிதாபம்' என்று அழைத்த ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மணிஷிண்டே ,"போதைப் பழக்கத்திற்கு அடிமையான, பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஐந்து முன்னணி உளவியாளர்களின் பராமரிப்பில் இருந்த ஒருவரை காதலித்த குற்றத்திற்காக அரசின் மூன்று துறைகள் ஒரு பெண்ணை வேட்டையாடுகிறது. சட்டவிரோதமாக நிர்வகிக்கப்பட்டமருந்துகளைப் பயன்படுத்தியதால் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண் டார்" என்று தெரிவித்தார்.
ரியா சக்ரவர்த்தியிடம் மூன்று நாட்களாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரியா சக்கரவர்த்தி, அவரின் சகோதரர் சாவந்த் மற்றும் மிராண்டா ஆகியோர் அடங்கிய ஒரு வாட்ஸ்அப் குரூப்பில், போதைப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டதாக என்சிபி தெரிவித்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக மிராண்டா ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்திருந்தார். எவ்வாறாயினும், ரியா போதைப் பொருள் பயன் படுத்தியதற்காக கைது செய்யப்பட்டாரா அல்லது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலோடு தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்டார என்பதை என்சிபி தெளிவுபடுத்தவில்லை.
முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புத் தவறாமல் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதாகவும், மனநல ஆலோசனைகள் காரணமாக அதை பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தியதாகவும் ரியா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். வழக்கறிஞர் மணிஷிண்டே,"ரியா ஒருபோதும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை, இரத்த பரிசோதனைக்கு அவர் தயாராக இருக்கிறார்" என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ரியா சக்ரவர்த்தியை முறைப்படி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் அனுமதி கோர இருக்கின்றனர். முந்தைய விசாரணையின் போது, ஊடகங்கள் ரியாவை சூழ்வது குறித்து போதைப்பொருள் தடுப்புத்துறை கவலை தெரிவித்திருந்தது. மெய்நிகர் மூலம் ரிமாண்ட் கோர நீதிமன்றமும் அனுமதி அளித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.