மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், கப்பலில் பயணிகளைப் போல் மாறுவேடத்தில் சென்று ரெய்டு நடத்தியதில், போதைப் பொருள் சப்ளை நடைபெற்றது உறுதியானது. இச்சம்பவத்தில் ஷாருக்கான் மகன் உட்பட 16 பேரை கப்பலிலிருந்து என்சிபி அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் என்சிபி ரெய்டில் வெளியாட்கள் எப்படி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், "ஆர்யன் கானை என்சிபி அதிகாரிகள் அழைத்துவரும் போது, அவருடன் தனியார் துப்பறிவாளர் கே.பி கோசவியும், மற்றொரு குற்றவாளி அர்பாஸூடன்பாஜக முக்கிய தலைவரான மனிஷ் பானுஷாலியும் இருக்கின்றனர். என்சிபி நடத்திய ரெய்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள். இவ்விவகாரம் குறித்து உயர் மட்ட குழு விசாரணை தேவை. இது பாஜக அரசு நடத்திய போலியான ரெய்டு என கூறியுள்ளார்.
சோதனையின் மறுநாள் எடுக்கப்பட்ட வீடியோவில் , பானுஷாலி குற்றவாளியின் கையைப் பிடித்து NCB அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வது போல் காணப்படுகிறது. அதேபோல், கோசவி ஆரியன் கானை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதைக் காண முடியும். இதுமட்டுமின்றி, அவர் என்சிபி அலுவலகத்தில் ஆர்யனுடன் எடுத்த செல்ஃபியையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பானுஷாலி, " டோம்பிவலியில் வசிப்பதாகவும், கல்யாண் டோம்பிவ்லி மாநகராட்சி தேர்தலுக்காக பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அக்டோபர் 1 அன்று சொகுசு கப்பிலில் போதை பார்ட்டி நடைபெறவுதாக வாட்ஸ்அப் மூலம் என் நண்பர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது. தகவல் உண்மை என்பதை அறிந்ததும், அடுத்த நாளே என்சிபி அலுவலகத்திற்குக் கூறினேன். எனது நண்பர் மூலம் தொடர்ச்சியாகப் போதை பார்ட்டி குறித்து தகவல் கிடைத்ததால், ரெய்டு நடைபெறும் போது என்னை அவர்களுடன் வரும்படி கேட்டு கொண்டார்கள்.
நான் சாட்சியாக அவர்களுடன் சென்றேன். ஏனென்றால், ரெய்டில் நடந்தவை மற்றும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பின்னர், விசாரணைக்காக என்சிபி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டவர்கள் இருந்த வாகனத்தில் தான் நானும் அமர்ந்திருந்தேன். என்சிபி அலுவலகத்திற்கு செல்லும் பாதை குட்டியாக இருந்ததால், என் பின்னால் வரும் நபரின் கையை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கோவசி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் என்சிபி அலுவலகத்தில் எடுத்த புகைப்படங்களும் எனக்கு தெரியாது" என்றார்.
இதுகுறித்து பேசிய என்சிபி அதிகாரி ஞானேஸ்வர் சிங், "இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர்கள் இருவரும் கப்பிலில் சாட்சிகள் தான். குற்றவியல் விசாரணையில், குற்றம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களுக்குச் சாட்சிகள் பயன்படுத்தப்படுகிறது.குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் பொருள்கள் சாட்சியின் முன் பதிவு செய்யப்படுகின்றன. அவர்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது.
மாலிக்கின் குற்றஞ்சாட்டு பழிவாங்கும் நோக்கிலே முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது மருமகன் போதை பொருள் வழக்கில் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருக்கிறார். அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல விரும்பினால், தாராளமாகச் செல்லலாம். நாங்கள் அங்கு பதிலளிப்போம். சட்டப்படி தான் எல்லாவற்றையும் செய்துள்ளோம்" என்றார்.
மற்றொரு என்சிபி அதிகாரி கூறுகையில், "இரண்டு அறைகள் மற்றும் வரவேற்பறையிலிருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் சிசிடிவி காட்சிகள் உங்களின் அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தும். நாங்கள் தகவலின்பேரில் ரெய்டுக்கு செல்கையில், கிடைத்த சாட்சி மீது போலீஸ் வழக்கு உள்ளதா அல்லது கட்சியை சேர்ந்தவரா என்பதை சோதித்துகொண்டிருக்க முடியாது என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.