மராட்டிய-கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியாக பெலகாவி அமைந்துள்ளது. இங்கு தற்போது எல்லைப் பிரச்னை வெடித்துள்ளது.
இந்த நிலையில் மராட்டிய வாகனங்கள் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம், “கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆத்திரமூட்டும் அறிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பாஜக மாநிலங்களவை எம்பி உதயன்ராஜே போசலே, “மத்திய அரசு தலையிட வேண்டும். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைக்க வேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண இப்பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்த போராட்டம் தொடரும், யாருக்கும் எந்த பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மராட்டிய துணை முதல்-அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்-அமைச்சசர் பசவராஜ் பொம்மையை டெலிபோனில் அழைத்து பெலகாவி அருகே ஹிரேபகவாடியில் நடந்த சம்பவங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அப்போது, இந்தச் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொம்மை உறுதியளித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவிலிருந்து வரும் வாகனங்கள் பாதுகாக்கப்படும் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் தொலைபேசியில் பேசியபோது அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு அரசு பேருந்துகள் செல்லவில்லை. மாநிலத்தில் பேருந்து சேவைகளை நடத்தி வரும் எம்எஸ்ஆர்டிசி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே பேருந்து சேவைகளை இயக்குவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/