மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) மற்றும் சிவசேனா கட்சிகள் பலவீனமான பெரிய பிளவுகளைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கட்சியின் இந்த இரண்டு மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டாளிகளையும் பகைத்துக் கொள்ளாமல், தனது தளத்தை விரிவுபடுத்தவும், தன்னை வலுப்படுத்தவும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் NCP மற்றும் உத்தவ் சிவசேனா (UBT) ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டில் கடுமையான பேரம் நடத்தவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் ஐந்து மணி நேரம் நீடித்த சந்திப்பில் கட்சியின் மத்திய தலைமையும் சில கடினமான பேச்சுகளில் ஈடுபட்டது.
இதையும் படியுங்கள்: மூழ்கும் சரத் பவார்; 2024 தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்கான திட்டத்தின் விதை தான் என்.சி.பி பிளவு
என்.சி.பி மற்றும் சிவசேனாவின் பிளவுகள், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த மாநிலத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெற முயற்சிக்கவும், எதிர்க்கட்சி இடத்தில் "வெற்றிடம்" இருப்பதாக கூறப்படுவதை நிரப்பவும், காங்கிரஸுக்கு ஒரு "பொன்னான வாய்ப்பை" அளித்துள்ளது என்பது ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் உணர்வாக இருந்தது.
மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான (LoP) உரிமைக் கோரிக்கையில் காங்கிரஸ் இப்போது பின்வாங்கப் போவதில்லை என்பதும் கூட்டத்தில் இருந்து வெளிப்பட்ட சமிக்ஞையாகும். காங்கிரஸ் இப்போது எதிர்கட்சி தலைவரின் பதவிக்கு "தார்மீக உரிமை கோரும்" நிலையில் உள்ளது என்றும், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக இது தொடர்பாக என்.சி.பி மற்றும் உத்தவ் சிவசேனா தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றிணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு மகாராஷ்டிரா தலைவர்களிடம் ராகுல் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தலைவர்கள் களமிறத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் மற்றும் எம்.வி.ஏ கூட்டணிக் கட்சிகளுடன் கட்சியின் சீட் பகிர்வு பேச்சுவார்த்தையின் முடிவுக்காக காத்திருக்க வேண்டாம் என்பது ராகுலின் செய்தி. இருப்பினும் சரத் பவார் அல்லது உத்தவ் தாக்கரேவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக உள்ளது.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கமிட்டி (எம்.பி.சி.சி) தலைவர் நானா படோல், மாநிலத் தலைமைக்கு எதிராகப் புகார் கூறித் தலைவர்கள் டெல்லிக்குச் செல்வது கட்சியின் செயல்பாட்டை பாதிக்கிறது என்று கூறியதன் மூலம் மாநில பிரிவில் சலசலப்புகள் இருப்பது வெளிப்படையாக வெளிவந்தன. அவரது பங்கில், மல்லிகார்ஜூன் கார்கே, கட்சித் தலைவர்களை சங்கடப்படுத்தும் வகையில் அவர்களிடம் தகவல் கூறாமல் அவர்களின் கோட்டைகளுக்குச் சென்று அவர்களை வருத்தப்படுத்த வேண்டாம் என்று நானா படோலிடம் கூறினார்.
காங்கிரஸ் பிரிவுத் தலைவராக, நானா படோல் மாநிலம் முழுவதும் தாராளமாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டது, ஆனால் அவர் உள்ளூர் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அமைச்சராக உள்ள நிலையில், மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து எச்.கே.பாட்டீலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸின் அடித்தளத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தந்த மாவட்டத்தின் மூத்த தலைவர் ஒருவரின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதம் தனி பாதயாத்திரைகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில், அனைத்து மூத்த தலைவர்களும் பங்கேற்கும் பஸ் யாத்திரையை மாநிலம் முழுவதும் கட்சி நடத்தவுள்ளது. சில தலைவர்கள் நிதிப் பிரச்சினையை எழுப்பியதால், மூத்த தலைவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பு ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா காங்கிரஸின் கோட்டை என்று ராகுல் கூறினார். அங்கு காங்கிரஸை வலுப்படுத்துவதும், மக்களின் குரலை உயர்த்துவதும்தான் எங்கள் கவனம். இந்த மக்கள் விரோத அரசு தோற்கடிக்கப்படுவதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோம் என்று அவர் பின்னர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கூட்டத்தில், சுஷில்குமார் ஷிண்டே, அசோக் சவான், பிருத்விராஜ் சவான், சஞ்சய் நிருபம் மற்றும் மிலிந்த் தியோரா உட்பட மகாராஷ்டிராவை சேர்ந்த அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.