NDA candidate Jagdeep Dhankar wins VP elections: மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருமான ஜக்தீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து, இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் பதிவான 725 வாக்குகளில், ஜக்தீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்க்ரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளானது.
இதையும் படியுங்கள்: ராகுலின் ஹிட்லர் ஒப்பீடு; அவர் ஜெர்மன் தலைவராக உருவானது எப்படி?
தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்கவுள்ள அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இன்று வாக்களித்தனர்.
ஜனதா தளம் (யுனைடெட்), ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பி.எஸ்.பி, அ.தி.மு.க மற்றும் சிவசேனா போன்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன், ஆரம்பம் முதலே தன்கர் எளிதாக வெற்றி பெறத் தயாராக இருந்தார். ஆம் ஆத்மி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றின் ஆதரவை எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா பெற்றாலும், காங்கிரஸுக்கு அடுத்தபடியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 39 எம்.பி.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டார். மார்க்ரெட் ஆல்வாவின் தேர்வு குறித்து தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டி வாக்களிப்பில் இருந்து விலகி இருக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்திருந்தது.
71 வயதான ஜக்தீப் தன்கர் சோசலிச பின்னணி கொண்ட ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் தலைவர். 80 வயதான மார்க்ரெட் ஆல்வா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆளுநராக பணியாற்றியுள்ளார்
ஜக்தீப் தன்கரின் வெற்றிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். "இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்துக்கள். உங்கள் நீண்ட மற்றும் வளமான பொது வாழ்வின் அனுபவத்தால் தேசம் பயனடையும். பயனுள்ள மற்றும் வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்" என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.
நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்தீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil