நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
இதில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதே போல பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அ.தி.மு.க எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் வேலுமணி மூத்த தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து கூட்டம் நடைபெறும் அசோக் ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அசோக் ஹோட்டலுக்கு வருகை தந்த அவரை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி உடன் தம்பிதுரை, சி.வி. சண்முகம், வேலுமணி ஆகியோர் இருந்தனர்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil