சென்னையைச் சேர்ந்த மூத்த சுங்க அதிகாரி பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனது கைப்பையில் ரூ 74 லட்சம் விமான நிலையத்திற்குள் கொண்டு சென்றதால், அந்த சுங்க அதிகாரி அமலாக்க இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மூத்த சுங்க கண்காணிப்பாளராக பணிபுரிபவர் இர்பான் அகமது முகமது. இவர் தனது மனைவியுடன் லக்னோ செல்வதற்காக பெங்களூரு விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் வழக்கமான சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். இர்பானின் கைப்பையை சோதனை செய்த போது, அந்த பையில் 74,81,500 ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகளாக காணப்பட்டுள்ளது. மற்றும் அந்த பையில் விலையுயர்ந்த மொபைல் போன்களும், தங்க நகைகளும் இருந்துள்ளது.
அதே விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், பெண்கள் கழிவறையில் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு சிதறிக் கிடந்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்திய சிஐஎஸ்எஃப் பெண் ஊழியர்கள், மூத்த சுங்க அதிகாரி இர்பானின் மனைவிதான் கழிவறையை இறுதியாக பயன்படுத்தினார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே சுங்க அதிகாரிகள் இர்பானையும் அவரது மனைவியையும் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தில் பயணம் செய்யும் போது கைப்பையில் ரூபாய் 50,000 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை மட்மே எடுத்து செல்ல அனுமதி உள்ளது. ஆனால் சுங்க கண்காணிப்பாளராக பணிபுரியும் இவர் ஏன் 74 லட்சத்தை கைப்பையில் எடுத்துச் செல்ல முற்பட்டார் என்பது அங்கிருந்த அதிகாரிகளிடம் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil