Advertisment

ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன? மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரபேல் போர் விமான ஒப்பந்தம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் 126 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Advertisment

126 போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் அதில் 18 விமானங்களை மட்டுமே பிரான்ஸ் நாடு பறக்கும் நிலையில் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

அதில் மீதம் இருக்கும் 108 விமானங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப விபரங்களை இந்தியாவிற்கு தர வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

108 விமானங்களை தயாரிப்பதற்கு ஏற்ப இடங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் முன்னேற்பாடாக செய்து வைத்திருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட்.

இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் மற்றொரு மைல் கல்லினை எட்டுவதற்காகவும் தயார் நிலையில் இருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்.

இந்தியாவில் தயாராக இருந்த 108 விமானங்களையும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் தயாரிப்பதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், 2014ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய பாஜக ஆட்சி அமைத்தது.

2015ம் ஆண்டு அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.

புதிதாக ஒப்பந்தம் ஒன்றிற்கு கையெழுத்திட்டார் மோடி. அதன்படி 18 விமானங்களுக்கு பதிலாக பறக்கும் நிலையிலேயே சுமார் 36 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக கூறினார்.

பறக்கும் நிலையில் விமானங்கள் வாங்கப்பட்டாலும் அதனுள் பல்வேறு தொழில் நுட்பக் கருவிகளை பொருத்தும் பணியையும் அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியையும் இந்தியா மேற்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸல்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு தர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாத நிலையில் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை தேர்வு செய்தது டஸ்ஸல்ட் நிறுவனம்.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் உள் நாட்டிலேயே விமானங்களை தயாரிக்காமல் எப்படி அனைத்து விமானங்களையும் பறக்கும் நிலையிலேயே வெளியில் இருந்து வாங்கக் கூடும் என்று கேள்வி எழுப்பினர்.

பல்வேறு ஆண்டுகளாய் அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனம் இருக்கும் போது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

58,000 கோடி ரூபாய் என்பது அதிகபட்ச விலை என்றும், காங்கிரஸ் கட்சி இறுதி செய்து அறிவித்த தொகையை விட 3 மடங்கு அதிக பணம் இதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினர்.

மக்களின் வரிப்பணத்தையும் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 79200 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த தொகையை கணக்கிட்டுப் பார்க்கும் போது 36 விமானங்களின் விலை என்னவோ 22600 கோடி ரூபாய் தான்.

ஆனால் 36 விமானங்களை ஏன் 58000 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

வழக்கு தொடர்ந்த எம்.எல்.சர்மா: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார்.

ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Narendra Modi All India Congress Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment